தாகத்தில் தவிக்கும் கோவை பட்டணம் ஊராட்சி மக்கள்! - குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

பட்டணம் கிராமத்தில் உள்ள கடைவீதி.

பட்டணம் கிராமத்தில் உள்ள கடைவீதி.

Updated on
2 min read

கோவை: கோவை பட்டணம் ஊராட்சி மக்கள் ஆண்டுக்கணக்கில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். கோவை மாநகர எல்லையை ஒட்டியுள்ள ஊராட்சி பட்டணம் ஆகும்.

ஒண்டிப்புதூரை அடுத்து பாலக்காடு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் இது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. பட்டணம் ஊராட்சியில் பட்டணம், பட்டணம்புதூர் மற்றும் நாக நாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், பல ஆண்டு காலமாக போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

பட்டணம் மக்கள் மன்ற அமைப்பாளர் ஆர்.கோவிந்தராஜன் கூறியதாவது: கோவை மாநகரை ஒட்டியிருக்கும் ஊராட்சி என்பதால், நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து விதமான நிறுவனங்களும் அதிகளவில் இந்த பகுதியில் இருப்பதால் தொடர்ச்சியாக மக்கள் குடியேற்றம் இருந்து வருகிறது. மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் விநியோகம் இல்லை.

குடிநீர் பற்றாக்குறை எங்கள் பகுதியில் இருப்பதால், இது தொடர்பாக தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். ஆனால் அதிகாரிகள் பொதுமக்களின் பிரச்சினைகளை பெரியதாக அலட்டிக்கொள்வதில்லை. இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஆண்டுக்கணக்கில் தீர்க்கப்படாமல் உள்ளது.

ஏற்கெனவே, 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,541 பேர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த கணக்கீட்டை வைத்து 3.6 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 2022-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி நடத்திய கூட்டத்தில் 23,218 பேர் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

பல கட்டங்களுக்கு பிறகு தற்போது 4.53 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் இது எத்தனை நாளுக்கு ஒருமுறை என்பது எங்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. அனைவரும் ஒரே வரியைத்தான் ஊராட்சியில் செலுத்துகிறோம். ஆனால் ஒரு பகுதியில் மாதம் ஒருமுறையும், மற்றொரு பகுதியில் மாதத்துக்கு 2 முறையும் அத்திக்கடவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறையால் பலரும் குடிநீர் மற்றும் உணவு சமைக்க உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் மாதம் ஒரு பெரும் தொகை செலவிடப்படுகிறது. சில இடங்களில் அத்திக்கடவு தண்ணீர் குறைந்து, விலைக்கு வாங்கி தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் அதிகரித்துவிட்டனர் என்பது தான் உண்மை.

இந்த ஊராட்சியில் 13,500 வாக்குகள் உள்ளன. இதனால் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தோம். அந்த அறிவிப்புக்கு பின்னர் தண்ணீர் விநியோகத்தை அதிகரித்து தருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குடிநீர் வரவில்லை. தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக போதிய தண்ணீர் கிடைக்காமல் தான் உள்ளோம்.

தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை, அடுத்தகட்டமாக அனைவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம். எங்களுக்கு நாள் ஒன்றுக்கு 22 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பட்டணத்தை சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினரும், ஆட்டோ ஓட்டுநருமான அர.பெருமாள்சாமி கூறும்போது, “ஊராட்சியில் 35 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு ஒருமுறை ஒருமணிநேரம் மட்டுமே குடிநீர் வருகிறது. அதுவும் போதிய அழுத்தத்துடன் வராததால், குடிநீரை பொதுமக்கள் தேவையான அளவு பிடிக்க முடிவதில்லை.

முன்பு பில்லூர் 3-ம் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அந்த திட்டத்தில் 300 எம்.எல்.டி தண்ணீர் கிடைக்கும் என்றும், அப்போது போதிய தண்ணீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். ஆனால் 2024-ம் ஆண்டு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் இன்று வரை எங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை” என்றார்.

<div class="paragraphs"><p>பட்டணம் கிராமத்தில் உள்ள கடைவீதி.</p></div>
ஜப்பானின் புதிய ஆட்சியும்.. இந்திய பொருளாதார எழுச்சியும்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in