

சென்னை: மலேசியாவில் மருத்துவ ஆராய்ச்சி மாணவரான பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டதாக சமூகநீதித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் வீடியோ அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேனியைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பி.எச்.டி.ஆராய்ச்சி படிப்பை பயின்று வருகிறார். அண்மையில் கல்வி நிதி தாமதமானதால், தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாணவர் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
மாணவனின் அந்தப் பதிவு அரசியல் களத்தில் பல விவாதங்களை எழுப்பியது. இதையடுத்து, சமூகநீதித்துறை தரப்பில் மாணவர் பாரதிதாசனுக்கு இந்தாண்டுக்கான கல்வி கட்டணம் ரூ.6 லட்சம், வாழ்வாதாரத் தொகையாக ரூ.6 லட்சம் என விடுவிக்கப்பட்டது. மேலும், முதலாம் ஆண்டு செலவின விவரங்களைதாக்கல் செய்ய வேண்டும் என மாணவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு மாணவர் பாரதிதாசன், கல்வி உதவித்தொகை தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசுக்கு அனுப்பி விட்டதாகவும், இந்தாண்டுக்கான ஆராய்ச்சி படிப்புக்கான முழுமையான நிதி கிடைக்கவில்லை என்றும் இரண்டாவது முறையாக வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் மாணவர் பாரதிதாசனுக்கு, அயலக கல்வி உதவித்தொகையாக ரூ.23.95 லட்சம் நேற்று விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.