

மதுரை: கரூர் கோயில் நிலங்களை பட்டா மாறுதல் செய்ய அனுமதிக்கும் ஆணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முறையிட்டதை அடுத்து அந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கரூரில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சொந்தமான சுமார் ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்வதற்கான தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணைக்கு தடை விதிக்க கோரியும், அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கவும் சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று முறையீடு செய்தார்.
மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இதில் 3,390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கபட்டது. இந்த நிலங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் 3,085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு பதிவுக்கான தடையை விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் நிலங்களை பட்டா மாறுதல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அரசாணையை ரத்து செய்தும், அதுவரை தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேலு அமர்வு, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று கூறினர்.