மதுரை காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள் மறியல்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸார்

மதுரை காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள் மறியல்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸார்
Updated on: 
2 min read

மதுரை: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரங்கப்பன் மகன் பாலகிருஷ்ணன்(42). இவர் மதுரையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜ் என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் தேவாரத்தில் இருந்து மதுரைக்கு ஏலக்காய் மற்றும் பார்சல்களை ஏற்றிச் சென்றபோது, வலந்தூர் கண்மாய்க் கரை அருகே கடந்த 4-ம் தேதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக முதலில் வலந்தூர் காவல் நிலையத்தில் விபத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்துக்கு நவ.13-ம் தேதி அழைத்து வரப்பட்ட பாலகிருஷ்ணன், அடுத்த நாள் (நவ.14) அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை போலீஸார் கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பாலகிருஷ்ணனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் 5 இடங்களில் காயம் இருப்பதாக உடற்கூராய்வு முடிவு வெளிவந்தது.

இந்நிலையில், ‘பாலகிருஷ்ணன் உயிரிழப்பு வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையின்போது பணியில் இருந்த காவலர்களை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக பிரதான சாலையில் அமர்ந்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், காவல் துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினரோ வருவாய்த் துறையினரோ பேச்சுவார்த்தை நடத்தாமல், காவல் உதவி ஆணையர் செல்வகுமார் தலைமையிலான போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாலகிருஷ்ணனின் மாமியார் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கும் முதல் உதவி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தரதரவென இழுத்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இந்த வாகனம் காந்தி அருங்காட்சியகம் அருகே சென்றபோது, திடீரென வாகனத்திலிருந்து குதித்த பாலகிருஷ்ணனின் மகன் விகாஷ் காவல் துறை வாகனத்தின் அடியில் படுத்துக்கொண்டு காவல் துறையினருக்கு எதிராக முழக்கமிட்டார். இதனால் போலீஸார் செய்வதறியாமல் திகைத்தனர். பின்னர் அவரை குண்டுகட்டாக தூக்கி தனி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுனரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய தங்களை காவல் துறையினர் கைது செய்வதாக கூறி பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதபடி சென்றனர்.

மதுரை காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உறவினர்கள் மறியல்: குண்டுகட்டாக கைது செய்த போலீஸார்
ராமர் கோயில் காணிக்கை திருட்டு: பாஜக, ஆர்எஸ்எஸ் நபர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக காங். குற்றச்சாட்டு

X