ராமர் கோயில் காணிக்கை திருட்டு: பாஜக, ஆர்எஸ்எஸ் நபர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக காங். குற்றச்சாட்டு

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: பாஜக, ஆர்எஸ்எஸ் நபர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக காங். குற்றச்சாட்டு
Updated on: 
3 min read

புது டெல்லி: ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் மவுனம் நாட்டுக்கு மிகவும் கவலையளிப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க, உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும் வகையில் ஒரு சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ராமர் கோயிலின் காணிக்கை திருட்டு என்பது நம்பிக்கை மீது இழைக்கப்பட்ட துரோகம். திருட்டு ஒருபோதும் மறைந்திருக்காது என்றும், காலப்போக்கில் ஒருநாள் உண்மை வெளிவந்தே தீரும் என்றும் சொல்வார்கள்.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரத்தில், நாள்தோறும் வெளிவரும் புதிய தகவல்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆகிய அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களைக் காப்பாற்ற மத்திய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் முயற்சிப்பதை அம்பலப்படுத்துகின்றன.

இந்த விவகாரம் இப்போது வெறும் திருட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு விசாரணை என்ற பெயரில், இந்த நாட்டு மக்களும் உச்ச நீதிமன்றமும் ஏமாற்றப்பட்டனவா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும், நீதிமன்றத்துக்கு காட்டுவதற்காக மற்றொரு குழுவும் என மொத்தம் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன என்பது தெளிவாகிறது.

ஜூலை 20 அன்று, முதல் குழு எந்த விசாரணையையும் நடத்தவில்லை என்று மாநில அரசு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது. அப்படியிருக்க, ஆகஸ்ட் 4 அன்று மாநிலச் சட்டமன்றத்தில், அதே குழுவின் ஆரம்பகட்ட விசாரணையை முதல்வர் எதன் அடிப்படையில் மேற்கோள் காட்டினார்? இது எந்த அடிப்படையில் செய்யப்பட்டது? சட்டமன்றத்துக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டதா அல்லது உச்ச நீதிமன்றம் தவறாக வழிநடத்தப்பட்டதா?

எந்த விசாரணையும் நடக்கவில்லை என்றால், ஜூலை 6 அன்று அறக்கட்டளை எதன் அடிப்படையில் சம்பத் ராய்க்கு ‘குற்றமற்றவர்’ (clean chit) என்ற சான்றிதழை வழங்கியது? எந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது?

மற்றொரு முக்கியமான கேள்வியும் உள்ளது. ஐஜி கிரண்.எஸ் என்பவர் முதல் குழுவில் உறுப்பினராக இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராகவும் அவரே நியமிக்கப்பட்டார். முதல் குழு எந்த விசாரணையையும் நடத்தவில்லை என்றால், அதில் அவரது பங்கு என்ன? மேலும், அந்தக் குழுவோ அல்லது அதன் அதிகாரிகளோ அறக்கட்டளையிடம் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தால், அது எந்த அதிகாரத்தின் கீழ், எந்த உத்தரவின் பேரில் செய்யப்பட்டது?

அவர் உறுப்பினராக இருந்த முதல் குழு அறக்கட்டளையிடம் அறிக்கை சமர்ப்பித்து, அதன் அடிப்படையில் அறக்கட்டளை சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘குற்றமற்றவர்’ என்று சான்றிதழ் வழங்கியிருந்தால், பிறகு இரண்டாவது அறிக்கை எதற்குத் தேவைப்பட்டது? அதன் முடிவுகள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவே கருதப்பட்டிருக்கும் அல்லவா?

உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்ட் 17-ம் தேதியிட்ட உத்தரவு, இந்த சிறப்பு புலனாய்வுக் குழு, தடயவியல் தணிக்கையாளர் ஒருவருடன் இணைந்து, அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதை உறுதிப்படுத்துகிறது.

மேலும், இந்த விசாரணை குறித்த நிலை அறிக்கையை மூடிய உறையில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவு குறிப்பிடுகிறது. அப்படியென்றால், ஆகஸ்ட் 17 அன்று ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை அறக்கட்டளையிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையானால், யாருடைய உத்தரவின் பேரில் இது செய்யப்பட்டது?

உச்ச நீதிமன்றத்துக்கு இது குறித்துத் தெரியுமா அல்லது அதனிடம் அனுமதி பெறப்பட்டதா? ஒரே மூத்த ஐபிஎஸ் அதிகாரி இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களிலும் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டதா? நீதிமன்றத்துக்கு ஒரு ரகசிய அறிக்கையும், அறக்கட்டளைக்கு ஒரு வெளிப்படையான அறிக்கையும் என ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

செப்டம்பர் 23 அன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இந்த வழக்கு ஏன் காணிக்கை எண்ணும் மையத்தில் பணியாற்றிய எட்டு ஊழியர்களுக்குள் மட்டும் சுருக்கப்பட்டது?

உச்ச நீதிமன்றத்தின் தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்பான குற்றங்கள் அல்லது அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் பங்கு குறித்து அதில் ஏன் குறிப்பிடப்படவில்லை?

அதே அதிகாரிகளைக் கொண்ட புலனாய்வுக் குழுவின் அறிக்கை அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டு, அதே சமயம் உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மூடிய உறையில் வைக்கப்பட்டிருந்தால், அந்தப் புலனாய்வின் நடுநிலைமை மற்றும் சுதந்திரத்தன்மை குறித்து தீவிரமான கேள்விகள் எழுவது இயல்பு. இத்தகைய புலனாய்வை நாடும், நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமும் நம்ப முடியுமா?

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும் வகையில், புதிய மற்றும் சுதந்திரமான ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டிய நேரம் இது. இந்த விசாரணை காணிக்கை எண்ணும் மையத்துடன் மட்டும் நின்றுவிடக் கூடாது; அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் அதற்குப் பொறுப்பான ஒவ்வொரு நபரின் பங்கையும் அது நடுநிலையுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

எங்களுடைய மூன்று கோரிக்கைகள் இவை:

1. மாநிலச் சட்டமன்றத்தில் முதல்வரால் குறிப்பிடப்பட்ட, முதல் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பாணையும், அதன் செயல்பாட்டு வரம்புகளும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.

2. அந்த முதல் குழுவின் இடைக்கால மற்றும் இறுதி அறிக்கைகள் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். மேலும், எந்த அதிகாரத்தின் கீழ் இந்த அறிக்கைகள் அறக்கட்டளையிடம் சமர்ப்பிக்கப்பட்டன என்பது விளக்கப்பட வேண்டும்.

3. உச்ச நீதிமன்றத்துக்கு மட்டும் நேரடியாக அறிக்கை அளிக்கும் வகையில், அறக்கட்டளையின் செயல்பாடுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் விசாரிக்க, புதிய மற்றும் சுதந்திரமான ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்.

ராமர் கோயில் என்பது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் அடையாளம்; அது ஏதோ ஓர் அறக்கட்டளையின் அல்லது தனிநபரின் சொந்த சொத்து அல்ல.

ராமர் பெயரில் வழங்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டப்பட வேண்டும். நம்பிக்கையின் பெயரால் யாரும் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படக் கூடாது.

பிரதமரே, உங்கள் மவுனம் நாட்டுக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் குறித்த உண்மை வெளிவர வேண்டும். மக்களுக்கு நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்தவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: பாஜக, ஆர்எஸ்எஸ் நபர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக காங். குற்றச்சாட்டு
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2-வது முறையாக சோதனை

X