

குரோம்பேட்டை: கைலாஷ் யாத்திரைக்காக குரோம்பேட்டையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேர் குறித்து இதுவரை தெளிவான தகவல் கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் குரோம்பேட்டையில் உள்ள சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: கைலாஷ் யாத்திரைக்காக ஆக.14-ம் தேதி நேபாளம் சென்ற எங்கள் உறவினர்களில் சிலருடன் ஆக.26-ம் தேதி வரை மட்டுமே தொடர்பு இருந்தது. அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
சீனா-நேபாள எல்லையில் உள்ள குடியுரிமை சோதனை மையம் அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அவர்கள் சிக்கியதாக தகவல் கிடைத்தது. 35 முதல் 40 நாட்களுக்கும் மேலாகியும் தகவல் கிடைக்காததால் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.
தமிழக அரசு சார்பில் தகவல்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், 49 குடும்பங்களுக்கும் தற்போதைய நிலை மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
காணாமல் போனவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தபோதிலும், அவர்களது செல்போன் எண்ணுடன் வங்கிக் கணக்கு மற்றும் ஏடிஎம் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதால் பணத்தை எடுக்க முடியவில்லை.
சில குடும்பங்களில் கணவர் மட்டுமே வருமானம் ஈட்டி வந்த நிலையில், தற்போது குழந்தைகளின் கல்விக் கட்டணம், வீட்டு செலவு உள்ளிட்ட அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே 49 பேரின் நிலை குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவலை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களை கண்டறியும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதுடன், குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அவசர உதவி வழங்க வேண்டும்.
வங்கியில் உள்ள பணத்தை சட்டப்படி குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கான நடைமுறைகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். முதல்வர் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.