

திருத்தணி: அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோயில் மலை மீது இம்மாதத்தில் 8 நாட்கள் ஆட்டோ செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
இம்மாதத்தில் அரசு விடுமுறை நாட்களான இன்று (காந்தி ஜெயந்தி), அக்.19 (ஆயுத பூஜை), அக்.20 (விஜயதசமி), அக். 4, 11, 18, 25 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் மாதக் கிருத்திகை நாளான அக்.27 ஆகிய 8 நாட்களில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அதிகளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இந்த 8 நாட்களில் திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஆட்டோக்கள் செல்வதற்கு கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதே நேரத்தில் பக்தர்களின் வசதிக்காக மலைப் பாதை நுழைவு வாயிலில் இருந்து, கோயில் படாசெட்டிக்குளம் வரை கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணமின்றி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் அரசு விடுமுறை நாட்கள், கிருத்திகை நாட்களில் வாகன நிறுத்தத்தில் இடவசதிக்கேற்ப பக்தர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள் கோயில் மலைப் பாதையில் அனுமதிக்கப்படும்.
இதர பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டணமின்றி நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என, திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.