

பாலகிருஷ்ணன்
மதுரை: மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற லாரி ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் 4 காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை உறவினர்கள், வழக்கறிஞர் பார்க்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அங்குள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
பாலகிருஷ்ணன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், இதனால் அவரை போலீஸார் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பாலகிருஷ்ணனின் மனைவி சுதா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், கணவரின் உடலில் வலது தோள்பட்டை, முதுகின் நடுப்பகுதி, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் இருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. கணவர் உயிரிழப்புக்கு முன்பாக அவரை காவல் துறையினர் சித்திரவதை செய்துள்ளனர்.
எனவே, செக்கானூரணி காவல் நிலைய கழிப்பறையில் இருந்து கணவரின் உடல் அகற்றப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை பாதுகாத்து வைக்கவும், செக்கா னூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பாதுகாத்து அதன் நகல்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது செக்கானூரணி உள்ளிட்ட 4 காவல் நிலையங்களின் 13, 14-ம் தேதி சிசிடிவி காட்சிகளின் நகல் களை தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜய குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 4 காவல் நிலையங்களின் சிசிடிவி பதிவுகள் டிஎஸ்பியிடம் பாதுகாப்பாக உள்ளன.
விரைவில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். அந்த பதிவுகளை மனுதாரருக்கு வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், உசிலம்பட்டி டிஎஸ்பி முகாம் அலுவலக சிசிடிவி பதிவுகளையும் வழங்க வேண்டும். காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை புகைப்படம் எடுக்கவில்லை.
சிசிடிவி பதிவுகளை பார்க்க மனுதாரருக்கு உரிமை உள்ளது எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதி, ஓட்டுநர் மரணத்தில் காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகளில் சில காட்சிகளை மட்டும் ஏன் கசிய விட்டுள்ளீர்கள்.
மனுதாரருக்கு சிசிடிவி காட்சிகளை வழங்க மறுப்பது ஏன்? பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு காட்சிகள் வெளியாகி இருக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் டீசர் போல் குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் ஏன் வெளியிட்டீர்கள்.
4 காவல் நிலையங்களின் பதிவான சிசிடிவி காட்சிகளை நவ.23-ம் தேதி மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.
அந்த காட்சிகளை பதிவு செய்யக்கூடாது. குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளுடன் சிசிடிவி காட்சிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. மனு முடிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.