

சென்னை: நில வகைப்பாட்டின் அடிப்படையில், சந்தை வழிகாட்டி மதிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து அங்கீகரிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு, பதிவுத்துறை தலைவர் கடிதம் வாயிலாக அறிவுறுத்தி உள்ளார்.
நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்பு, வழிகாட்டி உயர்மட்டக் குழுவால் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது நடைமுறையில் உள்ள சந்தை வழிகாட்டி மதிப்பில் 6 வகையான முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, பதிவுத்துறை தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வழிகாட்டி மதிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களைய, பதிவுத்துறை தலைவரால் மதிப்பீட்டுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அடிப்படையில், முரண்பாடுகளைக் களைந்து அங்கீகரிக்க, வழிகாட்டி மதிப்பீட்டு துணைக்குழுவின் தலைவர்களான மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிவுத்துறைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குடியிருப்பு வீதிகளாக உள்ளவை, தற்போது வணிக மற்றும் கலப்பு வகைப்பாடுகளாக மாற்றமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்னாளுமை முகமையில் இருந்து பெறப்படும் வீதிகளின் வகைப்பாடுகள், சொத்து வரி அடிப்படையில், 60 சதவீத மின் இணைப்பு உள்ள தெருக்களை வணிக தெருக்கள் வகைப்பாட்டிலும், 25 முதல் 60 சதவீதம் வணிக மின் இணைப்பு உள்ள தெருக்களை கலப்பு தெருக்கள் வகைப்பாட்டிலும், 25 சதவீதத்துக்கு குறைந்த வணிக மின் இணைப்பு உள்ள தெருக்களை குடியிருப்பு தெருக்கள் வகைப்பாட்டிலும் மாற்றியமைத்து முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
இரண்டு பிரதான சாலைகளை இணைக்கும் குறுக்கு சாலைகளில் அவற்றின் அகலத்தின் அடிப்படையில், முரண்பாடுகளையப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த பகுதிகள் அதிக வளர்ச்சியடைந்த சோழிங்கநல்லூர் பகுதியுடன் இணைந்த நாவலூர், வேங்கைவாசல் பகுதிகளைவிட, சோழிங்கநல்லூரில் சந்தை வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வளர்ச்சியடைந்த கிராமங்களின் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வழிகாட்டி மதிப்பை ஆய்வு செய்து முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளை ஒட்டிய விடுபட்ட புல எண்கள், உட்பிரிவுகளை தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் பெறப்படும் எண்களுடன் கூடிய வரைபடத்தின் அடிப்படையில் கண்டறிந்து, அப்புல எண்கள், சம்பந்தப்பட்ட சாலையில் அமைந்துள்ள அமைவிடம், பயன்பாட்டுக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
புல எண்களை வகைப்பாடுகளாகப் பிரித்து மதிப்பு நிர்ணயிக்கும்போது, ஒருசில விவசாய நிலங்கள் தவறுதலாக மனை மதிப்பாக வகைப்படுத்தப் பட்டுள்ளது கண்டறியப்பட்டுஉள்ளதால், அக்ரிஸ்டேக் விவரங்களுடன் இணைத்து பெறப்படும் வரைபடத்துடன் ஒப்பிட்டு வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
மாநகர், நகரப் பகுதிகள்: அதிக வளர்ச்சியடைந்த, மாநகர, நகரப்பகுதிகளின அருகில் உள்ள 1,020 கிராமங்கள், ஊராட்சிகளின் வளர்ச்சி அடிப்படையில், அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்புகளை ஒப்பிட்டு அதில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மனை மதிப்புகளுக்கு உள்ளதுபோல், அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தமிழ்நாடு மின்னாளுமை முகமை வரைபடங்கள் அடிப்படையில் குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயிக்க வேண்டும்.
மனை வகைப்பாடுகள்: தற்போது நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியில், 53 விளைநில வகைப்பாடுகள், 54 மனை வகைப்பாடுகளை, தமிழ்நாடு மின்னாளுமை முகமையில் இருந்துபெறப்படும் விவரங்கள் அடிப்படையில் வகைப்பாடுகளைக் குறைக்கலாம். இவை தொடர்பான கருத்து ருக்களை மதிப்பீட்டுத் துணைக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்து, சந்தை மதிப்பு வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து அங்கீகரித்து வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.