

முதல்வர் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை, அவரது வீட்டில் போலீஸார் நேற்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கோவில்பட்டி/ தூத்துக்குடி: முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மிரட்டும் வகையிலும் பொதுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக விளாத்திகுளம் திமுகஎம்எல்ஏ மார்க்கண்டேயனை போலீஸார் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, தூத்துக்குடி நீதிபதி உத்தரவின்பேரில், 15 நாள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ம் தேதி இரவு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடக்கு மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் பேசியதாவது:
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது, அப்போது இருந்த தலைவர்கள் நாகரிகமாக பேசினர். ஆனால், சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், ‘தேடிக் கொண்டிருக்கிறேன் உங்கள் தந்தையை’ என்கிறார்.
கைது செய்து விடுவார்கள் என பயந்து, இரவோடு இரவாக கரூரில் இருந்து கேரவனில் யாரை வைத்துக்கொண்டு ஓடினீர்கள்? எங்கள் தலைவர்களை அவமரியாதை செய்தால் அடித்து விரட்டத் தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில், என்ன பேசினாலும் அடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
‘‘உங்களை சட்டப்பேரவைக்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். சட்டமன்றத்தைப் பூட்டுவாராம். பூட்டியவருக்கு எலும்பு இருக்காது. உடைத்துவிட்டுத்தான் அனுப்புவோம்’’ என்று ஆவேசமாகவும், முதல்வரை ஒருமையில் குறிப்பிட்டும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் தவெகவினர் புகார் கொடுத்தனர். இதையடுத்து, விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீஸார் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏ வீட்டுக்கு நேற்று காலை சென்றனர்.
நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு வந்திருந்த அவரிடம், கைது செய்யவந்துள்ள தகவலை போலீஸார் தெரிவித்தனர். வீட்டுக்குள் சென்று தயாராகி வெளியே வந்த அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது 351(3), 352, 353(3) - கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுவது, இரு அமைப்பினர் இடையேமோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுவது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தகவல் அறிந்து திமுகவினர் திரண்டனர். அரசை கண்டித்து கோஷமிட்டவாறு, காவல் துறை வாகனங்களை மறித்து சாலையில் அமர்ந்தனர். இதனால், ஒரு மணி நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது. பின்னர், அவர்களை அப்புறப்படுத்திய போலீஸார், தூத்துக்குடி எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு மார்க்கண்டேயனை அழைத்துச் சென்றனர்.
அங்கும் திமுகவினர் திரண்டனர். முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் சென்னையில் இருந்து அவசரமாக தூத்துக்குடி திரும்பி நேராகஎஸ்.பி. அலுவலகத்துக்குச் சென்றனர். எம்எல்ஏக்கள் கோவில்பட்டி கருணாநிதி, பாளையங்கோட்டை அப்துல் வகாப், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நூற்றுக்கணக்கான திமுகவினர் அங்கு குவிந்தனர். ‘எம்எல்ஏவின் உடல்நிலை குறித்து அறிய வேண்டும்.
எஸ்.பி.யை சந்திக்க வேண்டும்’ என கூறினர். போலீஸார் அனுமதிக்காததால், தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திமுகவினர் 152 பேர் கைது: அனிதா ராதாகிருஷ்ணன் மயக்கம் வருவதாக கூறி, அங்கிருந்து வெளியேறினார். கீதாஜீவன், கருணாநிதி எம்எல்ஏ மற்றும் திமுகவினர் தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 152 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மார்க்கண்டேயனிடம் இரவு வரை விசாரணை நீடித்தது. சுமார் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு, ஏடிஎஸ்பி தீபு தலைமையிலான போலீஸார் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுமதி முன்பு அவரை ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில், 15 நாள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடைக்கப்பட்டார்.
ஸ்டாலின் கண்டனம்: மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சி ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படுகிறது. ஆட்சியில் நடைபெறும் தவறுகள், அவலங்களை சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது ‘டேக் டைவர்ஷன் மாடல்’ தவெக அரசு.
தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், பின்விளைவுகள் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யும் கண்டனம் தெரிவித்துள்ளார்.