

சிவகாசி: சிவகாசி தொகுதியில் தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் 2026 தேர்தலில் சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளராக ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டு உள்ளார். சிவகாசி தொகுதியில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.டி.ராஜேந்திர பாலாஜி, சில மாதங்களிலேயே அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப் பட்டார்.
தொடர்ந்து 2016 தேர்தலிலும் சிவகாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அமைச்சரானார். 2021 தேர்தலில் சிவகாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி கிடைக்காது என எண்ணிய ராஜேந்திர பாலாஜி, அதிமுகவுக்கு சாதகமான ராஜபாளையம் தொகுதிக்கு மாறினார்.
ராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்த ராஜேந்திர பாலாஜி, 3,898 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார். சிவகாசியில் போட்டியிட்டிருந்தால்கூட வெற்றி பெற்றிருக்கலாம் என அப்போது ராஜேந்திரபாலாஜி வருத்தப்பட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பின்பும் தொகுதியை சுற்றி வந்த ராஜேந்திர பாலாஜி மீண்டும் ராஜபாளையம் தொகுதியில்தான் களமிறங்குவேன் எனக் கூறி வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக ராஜபாளையத்துக்கு பதிலாக சிவகாசியில் கவனம் செலுத்த தொடங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்குவது, பொங்கல் பரிசு, இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, அவர் தொகுதி மாறுவது உறுதி என அதிமுகவினர் கூறி வந்தனர்.
அதன்படி, அதிமுக வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் சிவகாசி தொகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கட்சி அமைப்பில் கிளை முதல் மாவட்ட பொறுப்பு வரை தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளார்.
இதன் மூலம் விருதுநகர் மாவட்ட அதிமுகவின் முகமாக தன்னை வளர்த்துக் கொண்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு தனது அதிரடி பேச்சுகளால் தமிழகம் முழுவதும் அறியப்பட்டார்.
2019-ல் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சிவகாசியில் அதிமுக கூட்டணியைவிட காங்கிரஸ் 20 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றது.
மேலும், கே.டி.ராஜேந்திர பாலாஜியின் செயல்பாடுகள் மீது முன்னாள் எம்பி டி.ராதாகிருஷ்ணன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக ராஜபாளையம் தொகுதிக்கு ராஜேந்திர பாலாஜி மாறினார். ஆனால், அங்கும் தோல்வியே கிடைத்தது. தற்போது சிவகாசி கை கொடுக்கும் என நம்புவதால் இந்த முறை தனது சொந்த தொகுதிக்கே ராஜேந்திர பாலாஜி திரும்பிவிட்டார் என்று கூறினர்.