

புதுச்சேரி: “மாநில அந்தஸ்துக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாம். எந்த நிலைக்கும் தயார்,” என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் பேசும்போது, மாநில அந்தஸ்து தொடர்பான விவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “பேரவையின் எதிர்ப்பை பதிவு செய்ய பேரவைத் தலைவர் பேரவையை ஒத்திவைக்க வேண்டும்” என்றார். ஆனால் பேரவைத்தலைவர் அன்பழகன் சபையை ஒத்திவைக்க மறுத்தார்.
இதனால் விவாதம் ஏற்பட்ட, “மாநில அந்தஸ்துக்காக எம்எல்ஏ பதவியை எதிர்க்கட்சித் தலைவர் முதலில் ராஜினாமா செய்து எதிர்ப்பு காட்டுங்கள்” என்று பேரவைத் தலைவர் அன்பழகன் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட பாஜக எம்எல்ஏ ஜான்குமார், “நான் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என கூறினார். அவருக்கு ஆதரவாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தாங்களும் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளேன். மாநில அந்தஸ்து எவ்வளவு முக்கியம் என்பதும், அவசியம் என்பதும் எனக்குத் தெரியும். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எந்த நிலைக்கும் தயார். மாநில அந்தஸ்தை நாம் பெற்றே ஆக வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை. அப்படி இருந்தால்தான் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். பிரதமர் புதுவையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, அவரிடமே மாநில அந்தஸ்து வழங்காதது வருத்தமாக உள்ளது எனப் பேசியுள்ளேன். மாநிலம் வளர்ச்சி பெற மாநில அந்தஸ்து தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது" என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருக்கிறீர்கள். போர்க் குணத்தைக் காட்டுங்கள். சாதாரணமாகக் கேட்டால் தரமாட்டார்கள். மாநில அந்தஸ்து விஷயத்தில் எல்லாரும் தயார். உங்கள் காலத்தில் வாங்க முடியாவிட்டால் எப்போதும் வாங்க முடியாது” என்றார்.
அதைத்தொடர்ந்து, நேரடியாக முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்ல வேண்டும், உடனடியாக முடிவு எடுங்கள் என பேரவையில் எம்எல்ஏக்கள் பலரும் வலியுறுத்தினர்.