

புதுச்சேரி: நேபாளத்தில் சிக்கிய புதுச்சேரி பெண் யாத்ரீகர்கள் மூவரை மீட்கக் கோரி அமைச்சர் நமச்சிவாயம், வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்
அதன்படி, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில், புதுச்சேரியை சேர்ந்த 3 பெண்கள் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்றனர். ஆகஸ்ட் 26-ம் தேதி காலை நேபாளத்தின் ரசுவாகதி- திமுரே எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, புதுவையை சேர்ந்த 3 பேர் உட்பட 100-க்கும் மேற்பட்ட இந்திய யாத்ரீகர்கள் மாயமாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 26-ம் தேதி காலை வரை குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள், அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். கும்பகோணத்தை சேர்ந்த சுற்றுலா ஏஜென்சி மூலம் ஆகஸ்ட் 23-ம் தேதி புறப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழுவில் இவர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் ஒரு குழுவினர் பாதுகாப்பாக உள்ள நிலையில், புதுவையைச் சேர்ந்தவர்கள் உட்பட மற்றவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை.
எனவே, காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் உள்ளதால், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை விரைவுபடுத்தி குடும்பத்தினருக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் புச்சேரியை சேர்ந்த 3 பேரும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்படும் வரை அனைத்து உதவிகளையும் செய்ய வேணடும்” என அமைச்சர் நமச்சிவாயம் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.