

மதுரை: பல்வேறு வழக்கில் நீதிமன்றகளால் குட்டு வாங்கியும், பாடம் கற்க திமுக அரசு முன்வரவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயக்குமார் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:“வீரமங்கை வேலுநாச்சியார் கணவர் முத்துவடுகநாதர் 1950 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய போரில் உயிரிழந்தார் . இவரை தொடர்ந்து மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் உதவியுடன் வேலுநாச்சியார் படைகளை திரட்டி பிரிட்டிஷ் படைகளுடன் போரிட்டு வென்று ஆட்சியை விரிவு செய்தார். தனது 66-வது வயதில் இதே நாளில் மறந்த அவரது நினைவை போற்றவேண்டும்.
தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள நூலில் திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்துண் தான் என்று ஆதாரத்துடன் தகவலை வெளியிட்டுள்ளது. திமுக அரசு சர்வே கல் என, பொய் கூறி முற்றுப்புள்ளி வைக்கிறது. ஆதாரங்கள் வெளியிட்டாலும் ஸ்டாலின் அரசு நம்ப மறுக்கிறது. திமுக அரசால் ஒரு உயிர் பறிபோய் உள்ளது. மலையில் தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட பிறகும் ஜனநாயகத்தை ஸ்டாலின் அரசு கேலிக்கூத்தாக்கிறது. நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு குட்டு வாங்கியும் இன்னமும் பாடம் கற்க முன்வரவில்லை.
தமிழகத்தில் பாலியல், ஆள் கடத்தல், போதைப் பொருள், நில அபகரிப்பு போன்ற செயல்களை மூடி மறைக்க ஸ்டாலின் அரசு கையில் எடுத்திருக்கும் போர்வாள் கோயபல்ஸ் பிரசாரம். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாளில் உறுதி ஏற்கவேண்டும். 2026 ஆண்டில் அதிமுக ஆட்சி மலர உங்க கையில் தான் வாக்கு என்ற அதிகாரம் உள்ளது . வாக்கு அதிகாரத்தால் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பி, எடப்பாடியாரை கோட்டைக்கு அனுப்புங்கள்” இவ்வாறு அவர் கூறினார்.