

படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: “முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், தமிழக முதல்வர் விஜய்யை பாராட்டுவது போல் போலி ஏஐ வீடியோ வெளியிட்டு தமிழக முதல்வரே ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார். போலி வீடியோக்கள் மூலம் அதிமுகவை தவெக அபகரிக்க நினைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் தெரிவித்தார்.
மதுரையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தவெக செயல்படுத்தாத முடியாத தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து போலி வீடியோக்கள், இன்ஃப்ளூயன்சர்களை வைத்து போலியான பிம்பத்தை கட்டமைத்து ‘ரூட் மீடியா’ மூலம் சமூக வலைதளங்களில் பரப்பினர்.
இதன் மூலம் மக்களை ஏமாற்றி 34.99 சதவீதம் வாக்குகள் பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. தற்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின்பு ஒரு போலி வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், எம்ஜிஆர் விஜய்யை வாழ்த்துவது போலவும், ‘அதிமுக தொண்டர்களை பார்த்துக்கொள்ளப்பா’ என சொல்வதை போலவும் போலியான ஏஐ வீடியோ வெளியிட்டுள்ளனர்.
எப்படி போலி வீடியோ மூலம் ஆட்சி அமைத்தார்களோ, அதேபோல், போலி வீடியோக்களை தொடர்ந்து பரப்பி மக்களை ஏமாற்றுகின்றனர். எம்ஜிஆருக்கும், விஜய்க்கும் என்ன தொடர்பு? தமிழக முதல்வர் விஜய்யே ஏமாற்றும் வேலையில் ஈடுபடுகிறார். காங்கிரஸ் கட்சியும், திமுகவும், அதிமுகவை அழிக்க நினைத்து தோற்றுவிட்டது.
இரண்டரை ஆண்டான தவெக கட்சி, அதிமுகவை அபகரிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம். மக்கள் தான் நீதிபதிகள். அவர்கள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும். வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜம். தவெக ஒரு தோல்வி வந்தால் தாக்குப்பிடிக்க முடியாது. அந்தக் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை. அதனால் கட்டமைப்புள்ள அதிமுகவை அபகரிக்க நினைக்கிறது. இந்த வேலையை இதுவரை எந்த முதல்வரும், எந்த தலைவரும் செய்ததில்லை.
அதிமுகவில் இருந்து பக்கா திருட்டு வேலையை தவெக செய்கிறது. தற்போது அதிமுக என்னும் வீட்டிலிருந்து திருடுகின்றனர். அடுத்து எந்த வீட்டில் திருடுவார்களோ என தெரியவில்லை. மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிமுக மக்களுக்கான கட்சி.
மற்றும் பலர் என்று சொன்ன அதிமுக இடைத்தேர்தலில் 5 சுற்றுவரை தவெகவுக்கு தண்ணீர் காட்டியுள்ளோம். தவெக அதிமுகவை அபகரிப்பதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். போலி வீடியோக்கள் மூலம் கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளில் தவெக ஈடுபடக்கூடாது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தற்போது தலைமைச் செயலகத்தில் சினிமா படப்பிடிப்புபோல் முதல்வர் விஜய் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார். நாடு எங்கே போகிறது எனத் தெரியவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.