“காணாமல் போகும் சிறாரைக் கண்டறிய சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும்” - ரவிக்குமார் எம்.பி

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on: 
1 min read

புதுச்சேரி: “தமிழகம் முழுவதும் காணாமல் போகும் சிறார்களை கண்டறியவும், சிறாரகள் மீது நடத்தப்படும் வன்முறைகளை தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும்” என்று ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் அஞ்சமன் நூலக நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பியுமான ரவிக்குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எஸ்ஐஆர் நடவடிக்கையில் தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 1.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வானூர் தொகுதியில் 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார் என்ற விவரத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்க வேண்டும். அந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தி அவர்களை சேர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக அளவிலும் தேர்தல் தலைமை அதிகாரியிடமும் கேட்டுள்ளோம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கோட்டக்குப்பத்தில் மாதிரி சர்வே நடத்தப்பட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியைச் சேர்ந்த சிறுமி காணாமல் போன விவகாரத்தில் காவல் துறை சிறப்பாக பல தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர். அந்த சிறுமியின் தாய் இன்னும் கூடுதலாக ஒத்துழைப்பு கொடுத்தால் அதை கண்டறிந்துவிடலாம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காணாமல் போகும் சிறார்களை, அல்லது சிறார்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை தடுக்கவும், நடவடிக்கைகளை எடுக்கவும் சிறப்பு பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கோயம்புத்தூரில் பள்ளி மாணவன் தற்கொலை தொடர்பாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் கைது செய்யப்பட வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

திமுக குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த விமர்சனங்கள் தொடர்பாக அவரிடமே விளக்கம் கேட்க வேண்டும். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்ட விவகாரத்தைச் சாதி அடிப்படையில் பார்க்க வேண்டியதில்லை. திமுக ஆட்சி காலத்தில், கார்த்திகா மீது நடவடிக்கை எடுக்காததைப் பெருந்தன்மையாகக் கருத முடியாது. திமுகவினர் வேறு கணக்கில் இருந்திருக்கலாம்.

பாலியல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் தவெக, பாஜக, திமுக, அதிமுக, விசிக என யாராக இருந்தாலும் கட்சியின் பின்புலத்தை பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
“விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் ‘லியோ தாஸ்’ ஆக வலம் வருகின்றனரோ?” - பழனிசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in