

கோப்புப்படம்
சென்னை: தொழுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் சென்னையில் அதிகரித்திருப்பது பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2021 முதல் 2025 வரையிலானகாலகட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்ட தொழுநோய் பாதிப்புகள் குறித்த ஆய்வை, துறையின் நிபுணர்கள் தேவி கோவிந்தராஜன், வசந்தி தங்கசாமி, தர்மலிங்கம் வேதநாயகம் ஆகியோர் மேற்கொண்டனர்.
அந்த ஆய்வு முடிவுகளில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சராசரி தொழுநோய் பாதிப்பு விகிதத்தைவிட, சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. வயது, பாலினம், தொழுநோயின் வகை, குறைபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப் பட்டது.
குறிப்பாக, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளிலும், மாவட்ட எல்லை பகுதிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டு காலத்தில் மொத்தம் 515 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 2020-21-ல் லட்சத்தில் 1.0 ஆக இருந்த தொழுநோய் பாதிப்பு விகிதம், 2024-25-ல் 1.3 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக 2022-23-ல் அந்த விகிதம் 2.0-க்கும் அதிகமாக இருந்தது. 6 மண்டலங்களில் அதற்கும் அதிகமாகவே பாதிப்பு இருந்துள்ளது. அதில், 3 மண்டலங்கள் தொழிற்சாலைகள் நிறைந்தவை. மாவட்ட எல்லைகள் ஆகும்.
குடும்பத்திலிருந்தோ, பக்கத்து வீட்டினரிடம் இருந்தோ அந்த பாதிப்புகள் பரவவில்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், புலம்பெயர்ந்தவர்கள் மூலம் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. தொழிற்சாலைகள், மாவட்ட எல்லை பகுதிகளில் தொழுநோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அங்குள்ள புலம்பெயர்ந்த பணியாளர்களிடையே பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேசிய சராசரியைவிட தமிழகத்தில் பாதிப்புகளின் விகிதம் குறைவாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியால் தொழுநோய் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் தும்மலில் வெளியேறும் நீர் திவலைகளில் இருந்து பிறருக்கு அந்நோய் பரவுகிறது.
அக்கிருமி ஒருவரது உடலில் பாதிப்பை ஏற்படுத்த 5-ல் இருந்து 7 ஆண்டுகள் வரை ஆகலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது, இந்நோய் வெளிப்பட தொடங்கும். ஆரம்ப கட்டத்திலேயே தொழுநோயை கண்டறிந்து கூட்டு மருந்து சிகிச்சை அளித்தால் 100 சதவீதம், நோய் பாதிப்பை குணப்படுத்தலாம்.
சருமத்தில் உணர்விழப்பு, நிறமிழப்பு, காது மடலில் வீக்கம் அல்லது கட்டி, கை, கால்கள் தளர்ந்து போகும் நிலை, விரல்கள் வளைந்து போதல், கைகளில் பொருள்களை உறுதியாக பிடிக்க முடியாத நிலை, கை மற்றும் கால்களில் அரிப்பு, ஆறாத புண்கள் இருந்தால், அதனை அலட்சியப்படுத்தக்கூடாது” என்றனர்.