

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் ஆளும் கூட்டணியில் இருக்கும் பாஜக-வினரே தனக்கு ஏகப்பட்ட நெருக்கடிகளைக் கொடுத்ததால் கூட்டணி விஷயத்தில் எந்தக் கருத்தையும் சொல்லாமல் இருந்து வந்தார் முதல்வர் ரங்கசாமி. இதையடுத்து அவரை சமாதானப்படுத்த மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை வாரம் ஒருவராய் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது பாஜக. அதற்கும் பிடிகொடுக்காத ரங்கசாமி, கடைசியாக வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனக்குள் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.
இதையடுத்து புதுச்சேரியில் அரசியல் சூழல் மாறத் தொடங்கின. தொடர்ந்து ரங்கசாமியை விமர்சித்து வந்த பாஜக-வினர் அடக்கி வாசித்தார்கள். பாஜக அமைச்சர் ஜான் குமாருடன் சேர்ந்து கொண்டு ரங்கசாமியை விமர்சித்து வந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை டெல்லிக்கே அழைத்து பேச வேண்டிய ‘விதத்தில்’ பேசி அனுப்பினார் அமித் ஷா. இதையடுத்து, ரங்கசாமியை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் ஜோஸ். இந்த ‘வைபவத்துக்குப்’ பிறகு ஜோஸ் ரங்கசாமிக்கு எதிராக எங்கேயும் ‘வைபிரேட்’ ஆவதில்லை.
இந்த மாற்றங்கள் அனைத்துமே ரங்கசாமி என்டிஏ-வில் தொடர்வார் என்பதை உறுதிப்படுத்துகின்றன. கூட்டணிக்கு தலைமை ஏற்கும் ரங்கசாமி சென்டிமென்ட்டாக இம்முறையும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என்கிறது என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரம். இதுபற்றி நம்மிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், “கடந்த 2011-ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸைத் தொடங்கிய ரங்கசாமி 3 மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார். அப்போது இந்திராநகர், கதிர்காமம் தொகுதிகளில் நின்று வென்றார்.
அதையடுத்து 2016 தேர்தலில் இந்திரா நகரில் மட்டும் போட்டியிட்ட ரங்கசாமி, காங்கிரஸ் வேட்பாளர் ஏ.கே.டி.ஆறுமுகத்தை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எதிர்க்கட்சி தலைவரானார். அதனால் சென்டிமென்டாக நினைத்து 2021 தேர்தலில் தட்டாஞ்சாவடி, ஆந்திரம் அருகிலுள்ள ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ஏனாமில் தோற்றாலும் மீண்டும் முதலமைச்சராக வந்தமர்ந்தார்.இந்த சென்டிமென்ட்படி இந்த முறை மங்கலம், கதிர்காமம் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளார் ரங்கசாமி” என்றனர்.