

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மணிமண்டபத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: எந்த ஆட்சி குறித்தும் தற்போது நான் பேச விரும்பவில்லை. அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக திருச்சி வந்த அவர், மத்தியபேருந்து நிலையம் அருகேயுள்ளபெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சிறப்பான ஆட்சி வழங்கிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம்.
நம் நாட்டில் இருந்த பேரரசர்களை சாதி, மதம், மொழி போன்ற வேற்றுமைகளால் தொடர்புபடுத்தக் கூடாது. அவர்கள் அனைவரும் நமது வழிகாட்டிகள். இன்றைய சந்ததியர் நன்றாக இருப்பதற்கு, அவர்கள் வகுத்துத்தந்த வழிகாட்டல்களே காரணமாக உள்ளன.
நான் 5 ஆண்டுகள் குடியரசுத் தலைவராக செயல்பட்டதற்கும் அவர்களின் ஆசீர்வாதமே காரணம் என நம்புகிறேன். வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் என பிரித்து பார்க்கக் கூடாது. முன்னாள் எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் எனது நண்பர். அவரைப் போன்று தமிழகத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்.
என்னைப் பொருத்தவரை நாம் அனைவரும் இந்தியர்கள். எந்த ஆட்சி குறித்தும் தற்போது நான் பேச விரும்பவில்லை. அரசியலில் இருந்து நான் விலகி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மனைவி, மகளுடன் தரிசனம் செய்தார். அடுத்ததாக பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமான திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தரிசனம் செய்ய ஏதுவாக பேட்டரி கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை, தாயுமான சுவாமி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.