

நெடுந்தீவில் தஞ்சம் அடைந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்
ராமேஸ்வரம்: இலங்கை நெடுந்தீவில் தஞ்சம் அடைந்த 11 தமிழக மீனவர்களை ஆகஸ்ட் 21-ம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் (சனிக்கிழமை) அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு சூறைக்காற்றினால் இயந்திரப் பழுது ஏற்பட்டு நெடுந்தீவு அருகே தரை தட்டி பழுதடைந்தது நின்றது.
படகிலிருந்த ரமேஷ், அமல தீபன், கெர்சின் ரிஷப், ஹென்றி ரோகித், ஜான் ரிச்சர்ட், வெள்ளைச்சாமி, அந்தோணி ஆனந்த், ரோகன், சீமன், ஆரோக்கிய அசோக், பெரியகருப்பன் ஆகிய 11 மீனவர்கள் வியாழக்கிழமை காலை நெடுந்தீவில் கரை ஒதுங்கிய நிலையில், அவர்களை நெடுந்தீவு போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 21 வரையிலும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நெடுந்தீவில் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.