விருப்ப மனு பெயரில் பணமோசடி: அன்புமணி மீது டிஜிபியிடம் ராமதாஸ் புகார்

ராமதாஸ் | கோப்புப் படம்
ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: விருப்ப மனு பெயரில் பண மோசடி செய்வதாக அன்புமணி மீது டிஜிபிக்கு இமெயில் மூலம் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் டிச.14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஒருவாரத்துக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் 20க்குள் பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண் டும் என்று கட்சியின்தலைவர் அன்புமணி அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், விருப்பமனு விநியோகம் என்ற பெயரில் பணமோசடியில் அன்புமணி ஈடுபடுவதாக அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் தரப்பில் காவல்துறை டிஜிபிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ இரா.அருள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று இ-மெயில் மூலம் டிஜிபிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.

அதேபோல், தேர்தல் ஆணையத்திடமும் புகார்கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் மனுவை கொடுத்தும், ரூ.10,000 பணம் கொடுத்தும் ஏமாற வேண்டாம். கட்சியின் தலைவர் என்று சொல்லக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியதுபோல், நீதிமன்றத்தையும் ஏமாற்றுகிறார்கள்.

உண்மையான பாமக என்பது ராமதாஸ் தலைமையில் இருக்கும் பாமகதான். அவர் தான் கூட்டணியை முடிவு செய்வார். வெற்றிக் கூட்டணியை அமைப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

17-ல் நிர்வாகக் குழு: இதனிடையே ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பாமகவின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் 17-ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, அடுத்தகட்டசெயல்பாடு, தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் | கோப்புப் படம்
அமித் ஷா முதல் விஜய் வரை: தி.மலையில் உதயநிதி ‘அட்டாக்’ பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in