

திருவண்ணாமலை: “பிஹாரில் வென்றுவிட்டோம் அடுத்த இலக்கு தமிழ்நாடு என்கிறார் அமித் ஷா. இதுபோன்ற எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள கருப்பு சிவப்பு படை தயாராக உள்ளது” என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி தலைவரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாட்டில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 1.30 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இன்று பல கட்சிகள் உறுப்பினர்கள் சேர்க்கவே தடுமாறுகின்றனர். ஆனால் திமுகவில் இன்று நாம் பூத் கமிட்டி வரை நிர்வாகிகளை நியமித்துள்ளோம். இன்று 6 மாவட்டங்களின் 1.30 லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகள் இங்கு வந்துள்ளீர்கள்.
மாநாடு என்றால் நூற்றுக்கணக்கில் இளைஞர்களை திரட்டுவதே பல கட்சிகளுக்கு சவாலாக உள்ளது. இது கணக்குகாட்ட கூட்டப்பட்ட கூட்டமில்லை. எதிரிகள் கூடும் தப்புக்கணக்கை பொய்யாக்க கூடிய கூட்டம். இளைஞர்கள் என்றால் கட்டுபாடு இருக்காது, காட்டாறு போல கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் இப்போது கட்டமைக்கப்படுகிறது.
ஆனால் நம் இளைஞரணி கூட்டம் மிகுந்த கட்டுப்பாடுள்ள கூட்டம். கட்டுப்பாடு இல்லாத ஒரு கோடி பேரை வைத்துக்கொண்டும் ஒன்றும் சாதிக்க முடியாது. உங்களைப் போன்ற கட்டுப்பாடுள்ள கூட்டம் தமிழகத்துக்கே பலம்.
நம் கட்சியினர் ஆதிக்கத்துக்கு அடிபணிந்தது கிடையாது. சமீபத்தில் குஜராத்தில் பேசிய அமித் ஷா, பிஹாரில் வென்றுவிட்டோம் அடுத்த இலக்கு தமிழ்நாடு என்கிறார். அமித் ஷாவுக்கும் அவரின் அடிமை கூட்டத்துக்கும் ஒன்று சொல்கிறேன். இதுபோன்ற எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள கருப்பு சிவப்பு படை தயாராக உள்ளது. அப்படிப்பட்ட நம்மை குஜராத்தில் உட்கார்ந்துகொண்டு மிரட்டி அடிபணிய வைக்க முடியாது.
நீங்கள் பிஹார், உ.பி. ம.பியில் வென்றிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் உங்களால் நுழைய முடியாது. பாஜக என்பது மதம் பிடித்த யானை. அந்த யானையை அடக்கும் அங்குசம் முதல்வர் ஸ்டாலின் கையில் உள்ளது. இது மோடிக்கு தெரியும். அதனால்தான் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் மூலம் தமிழகத்தில் நுழைய பார்க்கிறார்கள்.
அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் இபிஎஸ்ஸை முதல்வராக்குவதாக தீர்மானம் போட்டுள்ளார்கள். அதிமுக இன்ஜின் இல்லாத கார். அந்த காரை பாஜக எனும் லாரி இழுத்துக்கொண்டு போகப்பார்க்கிறார்கள். பாசிச சக்தியிலிருந்து தமிழகத்தை காக்கும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உள்ளது.
அதனால்தான் தமிழகத்தில் ஏதாவது கலவரத்தை செய்ய பாஜக நினைக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞரணிக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டுமென திமுக தலைவரை கேட்டுக்கொள்கிறேன். களத்தில் கடுமையாக நமது இளைஞரணி உழைக்க வேண்டும். வானவில் பார்க்க அழகாக இருக்கும், பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால், உதய சூரியன் தான் வெளிச்சம் தரும்.” என்றார்.