

விழுப்புரம்: ராமதாஸின் மூத்த மகளான பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தியின் மகனும், தன்னுடைய மற்றொரு பேரனுமான ப.சுகுந்தனை, பாமக மாநில செயற்குழு உறுப்பினர் என்ற அடையாளத்துடன் அரசியலில் களம் இறக்கி இருக்கிறார் நிறுவனர் ராமதாஸ்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் இன்று (டிச.12) அறப்போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார்.
இந்த அறப்போராட்டத்தின் மூலமாக மூத்த மகளான செயல் தலைவர் ஸ்ரீகாந்தியின் மகனும், தன்னுடைய மற்றொரு பேரனுமான ப.சுகுந்தனை, பாமக மாநில செயற்குழு உறுப்பினர் என்ற அடையாளத்துடன் அரசியலில் களம் இறக்கி இருக்கிறார் நிறுவனர் ராமதாஸ்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சுகுந்தன், விழுப்புரத்தில் தன்னுடைய ‘கன்னி’ பேச்சை தொடங்கினார். அப்போது அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ராமதாஸின் குரல், இந்தியா முழுவதும் ஒலிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை பல மாநிலங்கள் நடத்தினாலும், சமூக நீதியை பேசி வரும் தமிழக அரசு முன்வரவில்லை. தமிழகத்தில் பெரும்பான்மையான சமூகத்துக்கு எதிரானது.
அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு சரியான சட்ட விதிகளை பின்பற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசுக்கான எச்சரிக்கையாகவே, இப்போராட்டத்தை ராமதாஸ் அறிவித்துள்ளார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். அனைத்து சாதியினருக்கும், அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.
அறப்போராட்டத்தில் 7 நிமிடம் பேசிய சுகுந்தனின் பேச்சில், 3 நிமிடம் வரை ‘அவர்களே’ என்று தான் இடம்பெற்றிருந்தது. அவரை மாவட்டச் செயலாளர்கள் புகழேந்தி, ஜெயராஜ் ஆகியோர் இரண்டு பக்கங்களிலும் நின்றுக் கொண்டு வழி நடத்தினர்.
அரசியல் பிரவேசத்தின் முதல் பேச்சு என்பதால், ஏற்கெனவே எழுதப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து சுகுந்தன் பேசினார். இவர், அன்புமணியின் நெருக்கடியால் பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து வெளியேறிய முகுந்தனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறப்போராட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.