

சென்னை: சென்னையில் இன்று (டிச.12) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.98,960-க்கு விற்பனையாகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தற்போது ரூ.90.46 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்தும் வருகிறது. இதனால், தங்கம் புதிய உச்சங்களைக் கண்டு வருகிறது.
அந்த வகையில், இன்று காலை தங்கம் விலை வரலாறு காணாத வகையில் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250-க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.98,000-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று பிற்பகல் தங்கம் விலை இரண்டாவது முறையாக மீண்டும் உயர்வைக் கண்டது.
அதன்படி, தற்போது கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,370-க்கும், பவுனுக்கு மேலும் ரூ.960 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஏற்பட்ட இந்த அதிரடி உயர்வு, தங்கம் விலையைச் சென்னையில் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
ஏற்கெனவே இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஒரு பவுன் ரூ.99,000-ஐ நெருங்கியுள்ளது.
வெள்ளி விலையும் உயர்வு: பொதுவாக தங்கம் விலை தான் ஒரே நாளில் இருமுறை உச்சம் தொடுவதைக் கண்டிருக்கிறோம். ஆனால் இன்று வெள்ளியும் இருமுறை உச்சம் கண்டுள்ளது. வெள்ளி தற்போதைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.216-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.2.16 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.