

சென்னை: “இந்த ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அன்புமணி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் அவரது துரோகக் கும்பலை மண்ணைக் கவ்வச் செய்யுங்கள்” என்று தனது தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று நான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்துப் பலரும் கண்ணீர் வடித்தீர்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண வேதனை எனக்கு மட்டுமே தெரியும்.
எப்போது அன்புமணி என் பேச்சைக் கேட்காமல், என் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுப் பணத்துக்காக அலையத் தொடங்கினாரோ, அன்றே ஒரு தந்தையாக நான் செத்துவிட்டேன். உங்களுக்காக நான் சிறை சென்றேன், ரத்தம் சிந்தினேன்; ஆனால் அன்புமணி இன்று அந்த ரத்தத்தைச் 'சமூக நீதி வியாபாரம்' ஆக மாற்றிவிட்டார்.
ஒவ்வொரு தேர்தல் சீட்டையும் பல கோடிகளுக்கு விற்று, நம் சமுதாயத்தின் உரிமைகளை அன்புமணி அடகு வைத்துவிட்டார். பெற்ற அப்பனையே கவனிக்காத ஒருவர், உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாங்கித் தருவாரா? தன் மனைவியையும் மகளையும் அதிகாரத்துக்காகப் பயன்படுத்தும் இவர், சாதாரணப் பாட்டாளிப் பெண்களுக்கு என்ன நன்மையைத் தருவார்? தருமபுரியில் சவுமியா வெற்றி பெற்றால், அந்தப் புண்ணிய பூமி விரைவில் 'அதர்மபுரி' என்று பெயர் எடுக்கும்.
அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தன் தந்தை கருணாநிதி சாகும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். இன்று உதயநிதி தன் தந்தையைக் கவுரவப்படுத்துகிறார்.
ஆனால், எனக்கு வாய்த்த பிள்ளையோ, நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து அரசியல் பண்ணுகிறார். இதை விட ஒரு தகப்பனுக்குப் பெரிய அவமானம் என்ன இருக்க முடியும்?
மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்துக்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு ஓட்டுப் போடுவது, உங்கள் பெற்ற தகப்பன் தலையிலேயே நீங்கள் மண்ணள்ளிப் போடுவதற்குச் சமம்.
இந்த ராமதாஸ் தோற்கலாம், ஆனால் துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அன்புமணி போட்டியிடும் இந்த 18 தொகுதிகளிலும் அவரது துரோகக் கும்பலை மண்ணைக் கவ்வச் செய்யுங்கள். தர்மம் ஜெயிக்கட்டும்!” என்று ராமதாஸ் உருக்கமாக கூறியுள்ளார்.