மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் முறையீடு

இன்று விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவிப்பு
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் முறையீடு
Updated on
1 min read

சென்னை: மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. அதையடுத்து இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் இன்று விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

மாம்பழம் சின்னத்தை பாமக தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து பாமக நிறுவனரான ராமதாஸ் தரப்பில் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் பாமக பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரியும் ராமதாஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இடைக்காலத் தடை: மாம்பழம் சின்னத்தை முடக்குவது தொடர்பாகவும், உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும் வரை சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக் கோரியும் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தன்னை இடையீட்டு மனுதாரராக சேர்க்கவி்ல்லை எனக்கூறி, பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்: சென்னை உயர் நீதிமன்றம் தங்களது மனுவை தள்ளுபடி செய்ததை எதி்ர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பில் மீண்டும் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில் 3 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தியது.

அதன்படி ராமதாஸ் தரப்பில், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தர்மபிரபு முன்பாக வழக்கறிஞர் வி.எஸ்.கோபு நேற்று ஆஜராகி முறையீடு செய்தார். அதையடுத்து இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் நாளை (மார்ச் 25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், தாக்கல் செய்யப்படும் மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கும் வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாம்பழம் சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் முறையீடு
தயாராக இருக்க வேண்டியது மக்களா? மத்திய அரசா? - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in