

சென்னை: ராமதாஸ் தரப்பு பாமக மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அபுமமுக கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இனணந்து கூட்டணி அமைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்தக் கூட்டணி செயல்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ராமதஸ் மற்றும் சசிகலா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சசிகலா, “ நாங்கள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளோம். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், “எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். எங்கள் கொள்கையுடன் உறுதியாக இருக்கும் கட்சிகள், எங்களுடன் இணைந்தால் கூட்டணி சேரலாம்” என்றார்.