

சென்னை: மருத்துவர்கள் 320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கிவிட்டு, 1071 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக திமுக அரசு பொய் சொல்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் இருவரும் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ராமதாஸ்: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 உதவி மருத்துவர்களை தேர்தெடுக்க, விண்ணப்பித்தவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு 1,071 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த 13-ம் தேதி 1,071 பேருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மற்ற 751 பேருக்கு வருங்காலத்தில் மருத்துவர் பணியிடங்கள் காலியானால், அப்போது கலந்தாய்வு நடத்தி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டுள்ளதா என சுகாதாரத் துறை தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரே தகுதியுடைய மருத்துவர்களில் சுமார் 70 சதவீதம் பேருக்கு துரோகம் செய்வது சரியல்ல. எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு திமுக வந்திருப்பது அதன் தோல்வி பயத்தையே வெளிப்படுத்துகிறது.
அன்புமணி: தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 மருத்துவர்களை நியமிக்க நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 320 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், 1,071 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அப்பட்டமான பொய்யை அரசு கூறியிருக்கிறது.
மருத்துவர்கள் நியமனத்தில் மோசடிகளை அரங்கேற்றி 751 மருத்துவர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஆணை வழங்கப்பட்டுள்ள 320 பேருக்கும் எந்த அடிப்படையில் அவை வழங்கப்பட்டன என்பதும் தெரியவில்லை.இந்த நடைமுறையில் எந்த வெளிப்படைத்தன்மையும் கடைபிடிக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மீதமுள்ள 751 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும். இதை திமுக அரசு செய்யத் தவறினால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். தகுதியுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதை பாமக உறுதி செய்யும்.