“அன்புமணியுடன் கூட்டணி பேசியது சட்ட விரோதம்” - ராமதாஸ் பாய்ச்சல்

Ramadoss

ராமதாஸ்

Updated on
1 min read

“அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது சட்ட விரோதம்; நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். எனக்கு மட்டுமே கூட்டணி பேச உரிமை உள்ளது. கட்சியினர் நாளை முதல் விருப்ப மனுக்களை வழங்கலாம்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிகளை முக்கிய கட்சிகள் அமைத்து வரும் நிலையில், நேற்று அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை இருவரும் கூட்டாக அறிவித்தனர். இதன்படி, பாமக-வுக்கு 18 இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்புமணியிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், அது சட்ட விரோதம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பாமக-வுக்கு நான் (ராமதாஸ்) மட்டுமே நிறுவன தலைவராக இருந்துகட்சியை வழிநடத்தி வருகிறேன்.

கடந்த டிசம்பர்மாதம் 17-ம் தேதி நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாமக-வுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது. நான் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றுள்ளேன்.

அன்புமணி, பாமக சார்பில் தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் விருப்ப மனுராமதாஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை ஜனவரி 9-ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் தைலாபுரம் தோட்டத்தில் வழங்கலாம். விருப்ப மனுக்களை தைலாபுரம் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Ramadoss
அதிமுக, பாமக கூட்டணி உறுதியானது: டெல்லி புறப்பட்டு சென்றார் பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in