

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் பாஜகவுக்கு ஆதரவாக புளியங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து சிந்தாமணி பேருந்து நிலையம் வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரோடு ஷோவில் பங்கேற்றார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. குற்றங்கள் அதிகரித்துள்ளன. இது திமுக அரசு தோல்வியடைந்துள்ளதை காட்டுகிறது.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் பொறுப்பு. திமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஊழல் செய்கின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் இங்கு ஓர் அமைச்சரையும், அவரது மகனையும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சொல்லியுள்ளது. இன்னொரு அமைச்சரின் பெயர் சட்டவிரோத மணல் கொள்ளையில் அடிபடுகிறது. மணல் கொள்ளை மூலம் சட்டவிரோதமாக 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துள்ளனர்.
திமுக எம்எல்ஏ ஒருவரின் மருத்துவமனையில் சிறுநீரக திருட்டு குறித்த குற்றச்சாட்டில் விசாரணை நடக்கிறது. திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். சட்டவிரோதமாக சாராயம் வெளிப்படையாக விற்பனையாகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த பிரச்சினையை வேரோடு அழிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாராய மாபியாக்களை ஒழிப்போம்.
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். தமிழ்நாட்டில் முருக பக்தர்களின் பூஜை செய்யும் உரிமைகளையும் பறிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று சொல்லியது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் மசோதாவை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தடுத்து நிறுத்தின. தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. மாநிலத்தில் கடன் தொகை 10.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடன் மட்டும் உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.