

திருச்சி: அரபிக்கடலில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது லட்சத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது. கர்நாடகா மற்றும் அதன் எல்லையோர தமிழக வளிமண்டலத்தில் நீடித்த காற்று சுழற்சியும் மேற்கு நோக்கி நகர்ந்தது.
புதிதாக இலங்கையின் தென்கிழக்கே நிலநடுக்கோட்டில் இந்திய பெருங்கடலில் காற்று சுழற்சி குமரிக்கடல் நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக, இன்று (டிச.5) சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறையும்.
இருந்தபோதிலும், திருவள்ளூர் முதல் டெல்டா வரை ஆங்காங்கே நல்ல மழைப் பொழிவை கொடுக்கும். டிச.6,7 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சற்று பரவலாக மிதமானது முதல் கனமழை வரை இருக்கும்.
டெல்டா உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் டிச.8 மழை இல்லாமல் இடைவெளி இருக்கலாம். அதே நேரத்தில், தென்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.
தற்போது தாய்லாந்தில் கனமழை கொடுத்து வரக்கூடிய நிகழ்வு இலங்கை மற்றும் தென் மாவட்டங்களை ஒட்டி மேற்கு நோக்கி நகரும் என்பதால், டிச.9 முதல் டிச.13-ம் தேதி வரை தென்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், டெல்டா மற்றும் தென் கடலோரம் கனமழை முதல் சற்று கனமழை வரை வாய்ப்பு தெரிகிறது. இந்நேரத்தில், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் சாரல் காற்றுடன் கடும் குளிர் நிலவும்.