ஓசூர்: ஓசூர் வனக்கோட்ட வனப் பகுதிக்குள் வலசை வந்துள்ள யானைகள் திக்குத்தெரியாமல் சுற்றி வருவதோடு, விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், யானைகளை ‘தெர்மல் ட்ரோன்’ மூலம் வனத்துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய வன உயிரியல் பூங்கா மற்றும் காவிரி வனஉயிரின சரணாலயத்தில் இருந்து ஓசூர் வனக்கோட்ட பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது வலசை வந்துள்ளன.
இவை தனித்தனி குழுவாக பிரிந்து ஜவளகிரி பகுதியில் 50 யானைகளும், ஓசூர் அருகே சானமாவு மற்றும் ராயக்கோட்டை வனசரகத்துக்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் ஆகிய காப்புக்காடு பகுதிகளில் 50 யானைகளும் சுற்றி வருகின்றன. இவை இரவு நேரங்களில் வனத்தையொட்டியுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இப்பகுதிகளில் தற்போது ராகி உள்ளிட்ட பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் யானைகள் இப்பயிர்களை தின்று ருசி பார்த்து விட்டதால், தொடர்ந்து வழக்கமான வலசை பாதைகளில் செல்லாமல் மீண்டும், மீண்டும் இப்பகுதியில் சுற்றி வருகின்றன.
இவை தனித்தனிக் குழுக் களாக சுற்றி வருவதால், இவற்றை வனத்துறையினர் விரட்டும்போது, தேன்கனி கோட்டை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றாலும், இரவு நேரங்களில் அவை மீண்டும் விளை நிலப்பகுதிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த 10 நாட்களில் இந்த யானைகள் வனத்துறையினர், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்தபோது, அவை அடர்ந்த வனப்பகுதியில் தங்காமல் வெளியேறி வருகின்றன. இதற்கிடையில், இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள ராகி மற்றும் காய்கறிகளை உடனடியாக அறுவடை செய்ய வனத் துறையினர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மேலும், யானைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வனத்தைவிட்டு வெளியேறுவ தால், இருள்சூழ்ந்த வனப்பகுதி யில் யானைகளை கண்காணித்து விரட்டுவதில் வனத்துறையினர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதோடு, யானைகள் இடம் பெயர்வை துல்லியமாக கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வனச்சரகர்கள் பார்த்தசாரதி (ஓசூர்), சக்திவேலு (ராயக்கோட்டை), விஜயன் (தேன்கனிக்கோட்டை) ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு, ‘தெர்மல் ட்ரோன்’ கண்காணிப்பு மூலம் சானமாவு வனப்பகுதியில் சுற்றிய 50 யானைகளை ஒருங்கிணைத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்தனர்.
மேலும், அவை மீண்டும் அங்கிருந்து வெளியேறாமல் தடுக்க தொடர்ந்து பகல் நேரத்தில் சாதாரண ட்ரோன்கள் மூலம் இரவில், ‘தெர்மல் ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
‘தெர்மல் ட்ரோன்’ என்றால் என்ன? - ‘தெர்மல் ட்ரோன்கள்’ விபத்து மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிக்கும், பெரிய வனப்பகுதியில் விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக புகை சூழ்ந்த பகுதி, பனிமூட்டம் உள்ள பகுதி, இரவு நேரங்களில் கண்காணிக்க உதவுகின்றன.
மேலும், 5 கிமீ தூரம் வரை பறக்கும் தன்மையும், பேட்டரியின் செயல்பாடு பல மணி நேரம் ட்ரோன் பறக்க உதவும் தன்மையும், துல்லியமாகவும், தெளிவாகவும் படங்களை வெளிப்படுத்தும் தன்மையும் கொண்டது. அகச்சிவப்பு கதிர்வீச்சு மூலம் வெப்ப படங்களை உருவாக்கும்.
ஓசூர் வனக்கோட்ட வனத்துறையில் இந்த வகை ட்ரோன் பயன்பாடு மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருவதால், யானைகள் இருக்கும் இடத்தை துல்லியமாக பதிவு செய்து, கண்டறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.