

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் மே 16-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் 19-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் மே 16-ம் தேதி வாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (மே 14) டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 15, 16-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, 17-ம் தேதி தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 18-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு உள் தமிழக மாவட்டங்களிலும், 19-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை நீலகிரி, 15-ம் தேதி கோவை, நீலகிரி, 16-ம் தேதி தேனி, 17-ம் தேதி நீலகிரி, 18, 19-ம் தேதிகளில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 81 டிகிரி முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 3 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, மாஞ்சோலை, ராமநாதபுரம் மாவட்டம் காரடர்ந்தகுடியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.