

திருச்சி: இலங்கையை ஒட்டி ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் (நவ.23, 24) கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் கடந்து அரபிக்கடல் சென்ற காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு அருகே நீடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் புதிய கீழடுக்கு சுழற்சி கடந்த 9-ம் தேதி உருவானது. இது மேலும் தீவிரமடைந்து இலங்கையின் தெற்குப் பகுதியையொட்டி தாழ்வு நிலையாக உருவெடுத்தது. தற்போது, இலங்கைக்கு தென் மேற்கே குமரிக் கடலையொட்டிய பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து இன்றும், நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் பரவலான மழைப்பொழிவை கொடுக்கும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக, தென் மாவட்டங்களின் கடலோரம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட மலைப் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
இதுவரை மழை பற்றாக்குறையாக உள்ள திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சுமத்ரா தீவு அருகே நீடித்து கொண்டுள்ள காற்று சுழற்சி தாழ்வுப் பகுதியாக தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் காற்று சுழற்சியாகவே நீடிக்கிறது. இதுதாழ்வுப் பகுதியாக உருவாகி தீவிரமடைய சில நாட்கள் தாமதமாகும் என்று தெரிகிறது.
வரும் நாட்களில் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கும் நிலையில், அதற்கு மாறாக இலங்கைகுமரிக்கடலுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ்வு நிலை தீவிரமடைந்து, மன்னார் வளைகுடா, இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு நோக்கி நகர்ந்து வரும் 29-ம் தேதி வரை அதிக மழையைத் தரும்.
அதே நேரத்தில், இது தீவிரத்தாழ்வுப் பகுதி அல்லது தாழ்வு மண்டலம் வரை மட்டுமே தீவிரமடையும் என்பதால், புயல் பாதிப்பு இருக்காது.
இதுபோல டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் புயல் பாதிப்பு இல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் அதிக மழைப்பொழிவு இருக்கும். மழையை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் நம்பிக்கையுடன் இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.