

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், நுங்கம்பாக்கத்தில் 10.7 செ.மீ., தரமணியில் 9.5 செ.மீ., மற்றும் நந்தனத்தில் 8.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோல் திருவள்ளூரில் 7.5 செ.மீ. மற்றும் காஞ்சிபுரத்தில் 6.3 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. முக்கியச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விடுமுறை முடிந்து ஊரிலிருந்து சென்னை திரும்பும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 21) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மழை தீவிரமடைந்து வருவதையொட்டிப் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வானிலை நிலவரத்திற்கு ஏற்பத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.