

சென்னை: “தவெக அரசின் மீதான மக்களின் அதிருப்தியை திசை திருப்பவே ரெய்டு நாடகம் நடத்துகிறார்கள். தவெக அமைச்சரும், எம்எல்ஏக்களும் செய்யும் ஊழல்களை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோம்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பட்டப்பகலில் படுகொலை நடக்கிறது, நேற்று மட்டும் ஆறு கொலைகளுக்கு மேல் நடந்துள்ளது.
சிங்கப்பெண் படை போலீஸாரிடமே போய் சில்மிஷம் செய்துள்ளார் ஒரு தவெக நிர்வாகி. பெண் காவலரிடமே தவெக நபர் பாலியல் தொல்லை கொடுக்க கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த விஷயம் வெளிய வரவும் காவல்துறை அந்த நபரை கைது செய்தது. ஆனால், அந்த நபரை விடுதலை செய்துள்ளார்கள். அந்த விடுதலைக்கு பின்னால் யார் இருந்தது?. இதெல்லாம் மக்கள் மத்தியில் இன்று செய்தியாக வந்துள்ளது.
எல்லா விலைவாசியும் ஏறியுள்ளது. திமுக ஆட்சியில் இருக்கும்போது அரிசி ஒரு மூட்டை ரூ.1600-க்கு விற்றது, இன்றைக்கு அது ரூ.2200 ஆகிவிட்டது. அதே மாதிரி ஒரு கிலோ ரூ.160-க்கு விற்ற பருப்பு இப்போது ரூ.190 ஆகிவிட்டது. சர்க்கரை ரூ.40 க்கு விற்றது, இன்று ரூ.74 ஆகி உள்ளது. ஆக பொதுமக்கள் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பல இடங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கும் கெட்டு போய்விட்டது. மின்வெட்டு அதிகமாகி இருக்கிறது. சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுக்கும் போதே மின்வெட்டு ஏற்படுகிறது. இதை எல்லாம் மறைத்து மக்கள் மத்தியில் இருக்கும் கோபத்தை திசை திருப்புவதற்காக இதுபோல ரெய்டுகள் நடத்தி தப்பிக்க நினைக்கிறார்கள்.
திடீரென இப்போது தேர்தல் நேரத்தில் ஏன் ரெய்டு குறித்து செய்தி வர வேண்டும். தவெக போட்டுள்ள இரண்டு வேட்பாளர்களையும் ஊருக்குள் நுழையக்கூடாது என மக்கள் உணர்ச்சியோட வந்து விட்டார்கள். காரணம் மக்களால் ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்எல்ஏ ஆகிவிட்டு பணத்தை வாங்கி கொண்டு கட்சி மாறியதால், அவர்களை தொகுதி மக்களே விரட்டுகிறார்கள்.
இதை எல்லாம் திசை திருப்புகிற முயற்சியில் இன்றைக்கு இந்த ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் இதெல்லாம் பார்த்து பழக்கப்பட்டுவிட்டோம். இதே லஞ்ச ஒழிப்புத் துறை வந்துதான் கருணாநிதியை 2001 நள்ளிரவில் கைது செய்தார்கள். 25 வருடம் ஆகிவிட்டது, இதுவரையில் ஒரு வழக்கு போட்டார்களா? போட முடிந்ததா? ஒரு நாள் செய்தியாக இதை மக்கள் மத்தியில் தேர்தல் நேரத்தில் பரப்ப பார்க்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்து பார்த்து அலுத்து போய்விட்டார்கள்.
மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. போதுமான மின்சாரம் இல்லை. விலைவாசி ஏறி போயுள்ளது, சட்டம் ஒழுங்கு கெட்டு சாலையில் நடமாட முடியவில்லை. இதை சரி செய்ய வேண்டும் என்று தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை இந்த ஆட்சியில் உள்ளது. ஆகவே இதை எல்லாம் திசை திருப்பும் முயற்சி இந்த ரெய்டு.
லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னவென்று தெரிந்துவிட்டது. உத்தர பிரதேசத்தில இருக்கும் கம்பெனிக்கு போய் லண்டன்ல கையெழுத்து வாங்குகிறார்கள். அவர் அங்கே இருந்து இங்கு வருவதற்குள் எல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதையெல்லாம் மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
இந்த 3 மாதத்தில் நடந்ததை எல்லாம் பார்த்துவிட்டு, செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிற வகையில் நல்ல முடிவை இடைத்தேர்தலில் வழங்குவார்கள். முக.ஸ்டாலின் செய்த சாதனைகளை எல்லாம் இப்போதுதான் எல்லாரும் உணர ஆரம்பித்துள்ளார்கள். இதற்கெல்லாம் இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் நல்ல முடிவை மக்கள் தருவார்கள், நிச்சயமா திமுக வெற்றி பெறும்.
இப்போது எல்லா இடத்திலும் ஊழல் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஒவ்வொரு அமைச்சரும், எம்எல்ஏவும் என்னென்ன ஊழல் செய்கிறார்கள் என்பதை, உரிய நேரத்தில் வெளிப்படுத்தி வழக்கு தொடுப்போம். யார் பணத்தையும் தொட மாட்டேன்னு சொல்லி விட்டு மக்கள் வரிப் பணத்தில போய் கார் ரேஸ் பார்க்கிறார். பட்டினப்பாக்கம் மீனவர்களை பாதிக்கும் வகையில் புதிய தலைமை செயலகம் அமைக்கக் கூடாது” என்றார்.