

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, செய்தி யாளர்களைச் சந்தித்தார்.
சென்னை: ‘தொகுதி மறு வரையறையை ஆதரிப்பவர்கள் தமிழகத்துக்கும், அதன் எதிர்காலத்துக்கும் துரோகம் செய்பவர்களாவர். ஒவ்வொரு தமிழரும் இதற்கு எதிராக நிற்க வேண்டும்.’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பான மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் 10 நாட்கள் பயிற்சி மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ராகுல் காரில் மாமல்லபுரம் செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் காத்திருந்த மாற்றுத்திறனாளி தொண்டரை பார்த்ததும் காரை நிறுத்தி, அவருடன் கலந்துரையாடினார். பின்னர் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசல்களும், அணிகளும் முட்டுக்கட்டையாக உள்ளன. அதை தகர்க்க வேண்டும். அனைவரும் தலைமையின் அறிவுறுத்தல்களை ஏற்று பணியாற்ற முன்வர வேண்டும். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக உள்ளவர்களை கட்சி கைவிடாது.
கட்சியை பலப்படுத்த வேண்டும்: நிர்வாகிகளின் செயல்பாடுகளை டெல்லி தலைமை கண்காணித்து வருகிறது. தவறு செய்பவர்கள், நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத தலைவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை. அதிக அளவில் இளைஞர்களைச் சேர்த்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். அவர்களிடம் ராகுல் பேசியதாவது: “எந்த பெற்றோரும் தங்களது குழந்தையை இழந்து துயரத்தில் இருப்பதை காண்பதுபோல வேதனையானது வேறு எதுவும் இல்லை. கேள்வித்தாள்கள் கசிந்துவிடுகின்றன. தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.
பல ஆண்டுகள் உழைப்பு ஒரே இரவில் வீணாகின்றன. நேர்மையாக உழைக்கும்படி மாணவர்களிடம் சொல்லப்படுகிறது, ஆனால் அந்த அமைப்பு நேர்மையற்றதாக இருக்கிறது. பிரதமர் மாணவர்களை ‘மன்னிக்க வேண்டும்’ என்று பேசுவது மிகப்பெரிய அவமானம். துயரத்தில் இருக்கும் பெற்றோரையோ, எதிர்காலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் கூடவோ பிரதமர் உட்கார்ந்து பேசவில்லை’’ என்றார்.
பாஜகவின் சதி முயற்சி: தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, செல்லகுமார் உள்ளிட்டோருடன், தமிழக காங்கிரஸ் வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறை முயற்சி, தமிழக மக்களிடமிருந்து அதிகாரத்தை பறிக்க உருவாக்கப்பட்ட ஒன்று. இது ஒரு சதி முயற்சியாக பார்க்கப்படுகிறது. தமிழக வரலாற்றில் ‘எட்டப்பன்’ என்ற பாத்திரம் தமிழகத்துக்கு துரோகம் செய்த ஒருவரின் குறியீடாக கருதப்படுகிறார்.
அதேபோல், தொகுதி மறு வரையறையை ஆதரிப்பவர்கள் தமிழகத்துக்கும், அதன் எதிர்காலத்துக்கும் துரோகம் செய்பவர்களாவர். மேலும் ஆர்எஸ்எஸ், பாஜக தமிழகத்தையும், தமிழக மக்களையும் தாக்க அனுமதிக்கிறார்கள். ஒவ்வொரு தமிழரும் இதற்கு எதிராக நிற்க வேண்டும். அனைத்து தமிழக கட்சிகளும், தேசிய கட்சிகளும், இந்த முயற்சியை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அகில இந்திய பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர், அமைச்சர்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.