

கோப்புப் படம்
சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேற்று சென்னை வந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கேரளா மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 9) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று மாலையுடன் அங்கு பிரச்சாரம் நிறைவடைகிறது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேற்று காலை 10 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
சென்னை வந்த இரு தலைவர்களுக்கும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விமான நிலைய விஐபி அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, காலை 10:30 மணி அளவில் ராகுல் காந்தி சிறிய ரக தனி விமானம் மூலம் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்தே தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு விரைந்தார். அதேபோல், பிரியங்கா காந்தி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கண்ணூருக்குப் புறப்பட்டார். ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் நேற்று சென்னை வந்திருந்த போதிலும், தமிழகத்தில் அவர்கள் நேற்று பிரச்சாரம் எதுவும் மேற்கொள்ளவில்லை.