

அமைச்சர் ரகுபதி
தோல்வி பயம் காரணமாகவே விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எந்தத் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரியாமல்தான் 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளிலும் அவருக்கு தோல்வி உறுதி. தோல்வி பயம் காரணமாகத்தான் இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். அவரால் எந்தத் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று கூட முடிவு செய்ய முடியவில்லை. அவரது கட்சியை அரசியல் கட்சியாகவே நாங்கள் கருதவில்லை.
தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி. தமிழகத்தில் பாஜகவுக்கு போதிய கட்டமைப்பு இல்லை என்ற உண்மையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக்கொண்டுள்ளார். டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில் இதை அவர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் பாஜக போட்டியிடுவதால், காவிக்கோட்டையாக புதுக்கோட்டை மாறாது. இது, உதயசூரியனின் கோட்டையாகவே இருக்கும். 2021-ல் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின் நகலைத்தான் அதிமுக இப்போதும் வெளியிட்டுள்ளது.
திமுகவில் 60 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிடுகிறது. எங்கள் இலக்கு 200. ஆனால், 4 முனைப்போட்டி நிலவுவதால் இலக்கைத் தாண்டி வெற்றி பெறுவோம். ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார். இவ்வாறு அவர் கூறினார்.