

சென்னை: ரூ.46 கோடி செக் மோசடி செய்ததாக சகோதரியும், நடிகையுமான அம்பிகா மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு அம்பிகா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து உள்ளார்.
கடந்த 1980-களில் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் அம்பிகா - ராதா. கேரளத்தைச் சேர்ந்த சகோதரிகளான இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா நேற்று ஒரு புகார் கொடுத்தார்.
அதில் கூறியுள்ளதாவது: சென்னை போரூர் ஆற்காடு சாலையில் எனக்கு சொந்தமான ஆர்.ஆர்.கார்டன் என்ற இடத்தில் வணிகம் செய்து வருகிறேன். இதற்கு முன்பு இந்த இடம் ‘ஏஆர்எஸ் கார்டன் ஸ்டூடியோ’ என இருந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, எனது தாய், சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட குடும்ப ஏற்பாட்டின்படி, இந்த சொத்து எனக்கு தரப்பட்டது. அந்த இடத்தில் எனது சகோதரர், சகோதரிகள், தாய்க்கும் சொத்து பிரிக்கப்பட்டு விட்டது.
நான் தொழில் நிமித்தமாக பல மாநிலங்களுக்கு செல்வது வழக்கம். சென்னைக்கு வரும்போது, வளசரவாக்கம் ஏ.ஆர்.தெருவில் உள்ள என் வீட்டில் தங்குவேன். இந்த வீட்டின் தரைதளத்தில் உள்ள ஒரு பகுதியை, என் அக்கா என்ற முறையில் நடிகை அம்பிகா பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருந்தேன்.
எனது தொழிலை நிர்வகிக்கும் நோக்கத்துக்காக, நான் இல்லாத நேரங்களிலும், அவசரத் தேவைக்காகவும் பணம் செலுத்துவதற்காக, தொகையை நிரப்பாமல் வெறுமனே கையெழுத்திட்டு 5-6 காசோலைகளை என் அறையில் வைத்திருப்பது வழக்கம். ஊழியர்களின் சம்பளம், மின்கட்டணம் உள்ளிட்ட வழக்கமான மற்றும் அவசரச் செலவுகளுக்கு அவற்றைப் பயன்படுத்தி வந்தேன்.
இதில் இருந்து 5 காசோலைகளைத் திருடி, கடந்த 17-ம் தேதி அம்பிகாவின் பெயரைப் பயன்படுத்தி, ரூ.46 கோடி எடுக்க முயன்றுள்ளனர். எனக்கும், என் அக்கா அம்பிகாவுக்கும் எவ்வித பணப் பரிமாற்றமும் இல்லாத நிலையில், திடீரென என் வங்கிக் கணக்கில் இருந்து, அவரது வங்கிக் கணக்குக்கு செல்லும் வகையில், பணம் எடுக்க முயற்சி செய்தது பற்றி என் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி அடைந்தேன்.
இதனால், என் வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு, அம்பிகா பெயரில் செலுத்தப்பட்ட காசோலைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துவிட்டேன். அம்பிகாவும், என் தம்பி மல்லிகார்ஜுன குஞ்சன் நாயரும் கூட்டு சேர்ந்து, இத்தகைய மோசடியில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் ராதா கூறும்போது, ‘‘சொந்த அக்கா, தம்பியே இப்படி மோசடி செய்ய முயற்சிப்பார்கள் என்று கனவிலும் நினைத்தது இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக எனது வீட்டிலேயே என்னை நுழைய விட மறுக்கின்றனர். அங்கு, தங்க, வைர நகைகள் உள்ளன. அவை என்ன ஆனது என்றே தெரியவில்லை’’ என்றார்.
இதற்கிடையே, தன் மீது ராதா தெரிவித்துள்ள குற்றச்சாட்டு களில் உண்மை இல்லை என்று அம்பிகா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.