6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம்

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம்
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் நோக்கத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப்.15-ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் தினமும் காலையில் கிச்சடி, பொங்கல் என தினமும் ஏதேனும் ஒரு வகை உணவு வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 37,447 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு, 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கத் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று காலை நடைபெறுகிறது. முதல்வர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுடன் உணவருந்துகிறார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

காமராஜர் பிறந்த விருதுநகரில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை முதல்வர் விஜய் செப்.17-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் விஜய் லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் சென்றதால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது சென்னையில் நடத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம்
சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது: தமிழகத்தில் 2,000 பேருக்கு சிகிச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in