

சென்னை: அனைத்து மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசிகளை இருப்பில் வைக்க வேண்டும் என தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் தெருநாய்கள் ஊடுருவுவதைத் தடுக்கவும், நாய்க்கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சில முக்கிய நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு தேசிய மருத்துவக் கவுன்சிலின் செயலர் டாக்டர் ராகவ் லங்கர் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: மருத்துவமனை வளாகத்துக்குள் நாய்கள் வராமல் கண்காணிப்பதற்கும், புகார்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு மருத்துவமனை அளவிலும் சிறப்பு தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், வட்டார மருத்துவ அதிகாரியும், அரசு மருத்துவமனைகளில், தலைமை மருத்துவ அதிகாரியும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலைய மருத்துவ அதிகாரியும் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும்.
நியமிக்கப்பட்டுள்ள தொடர்பு அதிகாரிகளின் பெயர் மற்றும் விவரங்கள் மருத்துவமனையின் நுழைவு வாயில் அல்லது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதனால் பொதுமக்கள் புகார் அளிப்பது எளிதாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனை வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தெருநாய்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இவர்களின் நேரடிப் பொறுப்பாகும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ரேபிஸ் தடுப்பூசிகள், இம்யூனோகுளோபலின் மருந்துகள் எப்போதும் போதிய அளவில் இருப்பில் இருக்க வேண்டும். இந்த மருந்துகளின் இருப்பு குறித்த விவரங்களை அவ்வப்போது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.