

சென்னை: புழல் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடியதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் விரிவான பாதுகாப்பு தணிக்கை நடத்த சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புழல் மத்திய சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகாத்தி, போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த சுரேஷ் ஆகிய 2 பேர் தப்பினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிறைத் துறையினர் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிறைத்துறை உயர் அதிகாரிகளுடன் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள் மற்றும் பெண்கள் சிறப்பு சிறைகளிலும் உடனடியாக பாதுகாப்பு தணிக்கை நடத்த உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, சிறை வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு, கண்காணிப்பு கோபுரங்களின் நிலை, சுற்றுச்சுவர்களின் உறுதித்தன்மை, கதவுகள் மற்றும் பூட்டுகளின் பாதுகாப்பு, காவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
மேலும், பாதுகாப்பு குறை பாடுகள் குறித்த அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் சிறைத்துறை தலைமையகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.