

தேர்தல் ஆணையம் சார்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தவெக, திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள். படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் (எஸ்எஸ்ஆர்) தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்தாண்டு இறுதியில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் (எஸ்எஸ்ஆர்) தொடங்கப்பட உள்ளன. 2027 ஜனவரி 1-ம் தேதியை வாக்காளர் தகுதியேற்பு நாளாகக் கொண்டு 17 மாநிலங்களில் இந்தப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து, வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகள் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12-ல் வெளியிடப்படும். பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்காக டிசம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில்,சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் நேற்று ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்துக்கு தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, விசிக, நாம் தமிழர், பாஜக, தேமுதிக, சிபிஐ, சிபிஐ (எம்) உட்பட 12 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை.
கூட்டம் தொடங்கியதும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து, எஸ்ஐஆர்-ஐ திரும்பப் பெற வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்துவிட்டு திமுக சார்பில் பங்கேற்ற எம்எல்ஏ ஆஸ்டின், முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸ், விசிக, தேமுதிக, நாம் தமிழர், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. கூட்டத்தில் அதிமுக, பாஜக, தேசிய மக்கள் கட்சி மட்டுமே பங்கேற்றன.
அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “எஸ்ஐஆர் பணியில் மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. இந்தக் குளறுபடிகளைச் சரி செய்யாமல் மீண்டும் ஒரு வாக்காளர் பட்டியல் திருத்தம் தேவையற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென வெளிநடப்பு செய்தோம்’’ என்றார்.