

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்து, அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நாளை (மார்ச் 17) அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அன்புமணியின் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இக்கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், “கடந்த 2019-ல் இருந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எங்களுடன் பயணித்து வருகிறார். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறோம். எங்கள் கூட்டணியில் கொண்டுவர தேவையான முயற்சி எடுத்துவருகிறோம். அவர் எங்கள் கூட்டணியில் வருவார் என நம்பிக்கை உள்ளது” என்றனர்.
புதிய தமிழகம் கட்சி வட்டாரத்தில் கேட்டபோது, “அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கமுடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 95 சதவீதம் அதிமுக கூட்டணியில் செல்ல வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணசாமி ஓரிரு நாளில் கூட்டணி நிலைப்பாட்டை தெரிவிப்பார்” என்றனர். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி 5 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.