

தூத்துக்குடி: “புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறொருவர் மூலம் 10 சீட் கேட்டார். பின்னர் 5 சீட் கேட்டார். அந்த கட்சி கடந்த தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் ஓட்டு வாங்கியது. ஆனால் அவர் அதிகமான சீட் கேட்டு ஆள் அனுப்பினார். நாங்கள் இயலாது என்று கூறி விட்டோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (தெற்கு), கடம்பூர் ராஜூ (வடக்கு), மாநகர செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எழுச்சி பயணத்தில் ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ளோம். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க திட்டமிட்டு நான் பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.
கடந்த 14.12.2023 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் 17.12.2023 முதல் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தி.மு.க. அரசு சென்னையை போன்று, தென்மாவட்டங்களில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன. 18-ம் தேதி முதலே அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். 19.12.2023 அன்று உடனடியாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கும் நான் நேரில் சென்று மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினேன்.
தூத்துக்குடியில் முழங்கால் அளவு தண்ணீரில் நானே நேரில் சென்று நிவாரண பொருட்களை கொடுத்தோம். ஆனால் முதல்வர் 19-ம் தேதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் டெல்லியில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை. அதுமட்டுமல்ல. இந்த மாவட்டத்தின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 5 நாட்கள் கழித்துதான் மக்களை சந்தித்தார்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தூத்துக்குடியில் உள்ள பக்கிள் ஓடையை தூர்வாரி சரி செய்ய 80 சதவீதம் பணிகள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. ஆட்சி வந்த பிறகு, அந்த 20 சதவீதம் பணிகள் நிறைவேற்றப்பட்டு இருந்தால், தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் செல்லும் ஓடை வழியாக வெள்ளம் வடிந்திருக்கும். ஆனால் சரியான முறையில் தூர்வாராததால், வெள்ளம் தூத்துக்குடி நகரில் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
இதனால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இப்படிப்பட்ட சூழலில் கூட முதல்வர் மக்களை சந்திக்காததன் மூலம் எந்த அளவுக்கு இந்த அரசு அலட்சியமாக இருந்தது என்பதை நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று குறிப்பிடுகிறார்கள். விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுவே சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதற்கு சான்று.
விஜய் வேட்பாளர் அறிவிக்கும்போது இருமுனை போட்டி தான் என்று கூறி இருக்கிறார். அவர் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும். புதிதாகத்தானே வந்து இருக்கிறார். தேர்தல் முடிந்தால் தான் அவரது விவரம் தெரியும்.
அ.தி.மு.க. கூட்டணியில் எந்த அதிருப்தியும் இல்லை. யாரும் திரித்து செய்தி வெளியிட வேண்டாம். தி.மு.க கூட்டணி கடந்த 23 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருந்து, இரண்டு நாட்களுக்கு முன்புதான் இறுதி செய்தது. காங்கிரசுக்கும், தி.மு.கவுக்கும் கிட்டத்தட்ட18 நாட்கள் வார்த்தை போர் நடந்தது.
பத்திரிகை, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்ற நிலைக்கு எல்லாம் வந்து விட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களும், மாநில பொறுப்பாளர்களும் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டனர். அதற்கு எதிர் கருத்துக்களை தி.மு.க. நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.
அதுமட்டுமல்ல தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மனவருத்தத்தில் உள்ளனர். ம.தி.மு.க. முக்கிய தலைவர் பேச்சுவார்த்தை முடித்து விட்டு வெளியில் வரும் போது, அழுதுகொண்டே சிரிக்கிறேன் என்று கூறினார். அப்படிப்பட்ட நிலைமைதான் அந்த கூட்டணியில் உள்ளது.
எங்கள் கூட்டணியை பொருத்தவரை, கூட்டணி தலைவர்களை அழைத்து பேசினோம். அன்றைய தினமே கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் அறிவிக்கப்பட்டன. மறுநாள் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். அதற்கு அடுத்தநாள் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2-வது வேட்பாளர் பட்டியலும், தற்போது 3-வது வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுட்டது.
எனவே அ.தி.மு.க.வை பொறுத்தவரை எங்களது கூட்டணியில் எந்தவித சிறு கடுகளவு கூட பிரச்சினை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எங்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. வேறொருவர் மூலம் 10 சீட் கேட்டார். பின்னர் 5 சீட் கேட்டார். எங்களால் இயலாது என்று கூறி விட்டோம்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, எங்களுடன் அவர் கூட்டணியில் இல்லை. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு கூட்டணியிலும் கட்சிகள் சேரும், அந்தந்த கட்சியின் வாக்கு வங்கிக்கு ஏற்றவாறு தான், அந்த கட்சிக்கு இடம் ஒதுக்கப்படும். 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் ஓட்டு வாங்கி உள்ளார். அவருக்கு எத்தனை தொகுதி கொடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும்.
கூட்டணியில்அங்கம் வகிக்கும் கட்சிகள், அந்தந்த கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையை அவர் கடைபிடித்தால் பரவாயில்லை. ஆனால் அவர் அதிகமான சீட் கேட்டு ஆள் அனுப்பினார். நாங்கள் இயலாது என்று கூறி விட்டோம்.
கச்சத்தீவு, மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சியில் இருந்த போது தாரைவார்க்கப்பட்டது. அதன்பிறகு 15 ஆண்டு காலம் மத்திய அரசுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தி.மு.க. அப்போதாவது கட்சத்தீவை மீட்டு இருக்கலாம். நாங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆனாலும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தோம்.
மீனவர்கள் நலன் கருதி கட்சத்தீவை மீட்க வேண்டும். இல்லையென்றால் தற்காலிகமாக நீண்டகால குத்தகைக்கு எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, கட்சத்தீவை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.