

உடுமலையில் பொரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்.
உடுமலை: மூலப்பொருட்களின் விலை உயர்வால் உடுமலையில் பொரி உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உடுமலையை அடுத்த ஏரிப்பாளையம், குமரலிங்கம், கொழுமம், பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொரி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.
பொரி தயாரிப்பிற்கான சிறப்பம்சங்கள் கொண்ட அரிசி, கொல்கத்தா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த அரிசியை நீரில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து சிறு குவியல்களாக குவிக்கின்றனர். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் சேர்த்து சில மணி நேரம் பக்குவப்படுத்துகின்றனர்.
பக்குவப்படுத்தப்பட்ட அரிசியை அடுப்பில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பதமாக வேகவைக்கும் போது மொறுமொறுப்பான, சுவையான பொரி தயார் செய்யப்படுகிறது.
நடப்பாண்டு மூலப்பொருட்களின் விலை உயர்வு உற்பத்தியாளர்களைப் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.55-க்கு விற்கப்பட்ட பொரி அரிசி, தற்போது பல்வேறு காரணங்களால் விலை உயர்ந்து ரூ.75-க்கு விற்பனையாகிறது.
தயாரான பொரிகள் மூட்டைகளில் அடைக்கப்பட்டு கோவை, திருப்பூர், மதுரை, பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்த வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இது குறித்து உற்பத்தியாளர் பூங்கொடி செந்தில்குமார் கூறும்போது, ‘‘பொரியைப் படி மற்றும் பக்கா கணக்கில் விற்பனை செய்கிறோம். மூலப்பொருட்கள் விலை உயர்வால் 55 பக்கா எடையுள்ள ஒரு பொரி மூட்டை தற்போது ரூ.570-க்கு விற்பனையாகிறது.
சமீபகாலமாக அயல்நாட்டுச் சிற்றுண்டிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் பாரம்பரியப் பொரியின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகள் வரவுள்ள நிலையில், விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
ஆனால், பண்டிகைக்கு பிறகு தொழில் மந்த நிலைக்கு சென்றுவிடும். உடுமலை சுற்றுவட்டாரத்தில் முன்பு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன.
ஆனால், தொழில் நலிவடைந்ததால் பெரும்பாலானோர் மாற்று வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். நலிவடைந்து வரும் பொரி உற்பத்தித் தொழிலையும், அதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
பொரி உற்பத்திக்குத் தேவையான நவீன இயந்திரங்களை வாங்குவதற்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கி, பாரம்பரியத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதே பொரி உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.