

பார் கவுன்சில் தேர்தல் தலைமை அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, உயர்மட்டக் குழு உறுப்பினர் இ.ஓம் பிரகாஷ் ஆகியோர் தேர்தல் குறித்து நேற்று விளக்கினர்.
சென்னை: முதன்முறையாக ‘க்யூ-ஆர்’ கோடு முறையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது நடைபெறவுள்ளது.
மொத்தம் உள்ள 25 உறுப்பினர்களில் 2 பெண் உறுப்பினர்கள் நியமன முறையில் உச்ச நீதிமன்றஉத்தரவுப்படி அகில இந்திய பார் கவுன்சிலால் நியமிக்கப்படுவர். மீதமுள்ள 23 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெறவுள்ளது.
இந்த 23 பேரில் குறைந்தபட்சம் 5 பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், மொத்தம் 143 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1 லட்சத்து 540 வழக்கறிஞர்கள் வாக்களிக்கவுள்ளனர். முதன்முறையாக க்யூ-ஆர் கோடு முறையில் இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது.
ஆன்லைன் மூலமாக க்யூ-ஆர் கோடுக்கான படிவத்தை பதிவிறக்கம் செய்யும் போது, அதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் பெயர், பதிவு எண், வாக்குப்பட்டியல் வரிசை எண், பதிவு செய்துள்ள வழக்கறிஞர் சங்கம், வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஒரு வழக்கறிஞர் முன்னுரிமை அடிப்படையில் 1 முதல் 23 வேட்பாளர்களை, அவர்களின் பெயர்களுக்கு எதிராக 1, 2, 3 என நம்பரை எழுதி தங்களது வாக்கை பதிவு செய்யலாம். இதுதொடர்பாக தேர்தல் தலைமை அதிகாரியும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கே.என்.பாஷா மற்றும் பார் கவுன்சில் தேர்தல் உயர் மட்டக்குழு உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான இ.ஓம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த பார் கவுன்சில் தேர்தல் பணிகள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தர்தலைமையிலான உயர் மட்டக்குழுவின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 166 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள தமிழக வழக்கறிஞர்களும் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பெட்டி டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல முதன்முறையாக க்யூ-ஆர் கோடு முறையில் வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படுவதால் வழக்கறிஞர்களின் விவரங்கள் நொடிப்பொழுதில் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு எளிமையான முறையில் விரைவாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
ஒரு வழக்கறிஞருக்கு எந்த இடத்தில் வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டுள்ளதோ அங்கு மட்டுமே அவரால் வாக்களிக்க முடியும். சென்னையில் அதிகபட்சமாக 30 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். இதில் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 28 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளனர். எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் 56 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலை முறையாகக் கண்காணிக்கும் வகையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தேர்தல் பார்வையாளர்களாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளான கோகுல்தாஸ் சென்னைக்கும், ராஜேஸ்வரன் கோவைக்கும், பி.என்.பிரகாஷ் திருவள்ளூருக்கும், பஷீர்அகமது நாமக்கல்லுக்கும், சொக்கலிங்கம் அரியலூர் மற்றும் பெரம்பலூருக்கும், பாஸ்கரன் திருச்சி மற்றும் புதுக்கோட்டைக்கும், கோவிந்தராஜன் மதுரைக்கும், ஆர்.என்.மஞ்சுளா வேலூருக்கும், நக்கீரன் கன்னியாகுமரிக்கும், பெரிய கருப்பையா செங்கல்பட்டுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை: ஏப்.3-ல் தொடங்கி அதிகபட்சமாக ஒன்றரை மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.