“மத்திய அரசின் பழைய கடனை தள்ளுபடி செய்ய முயல்வீர்” - புதுச்சேரி பேரவையில் நாஜிம் வலியுறுத்தல்

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்

புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்

Updated on
2 min read

புதுச்சேரி: “மாநில அந்தஸ்தை ஓரம் வைத்துவிட்டு, மத்திய அரசின் பழைய கடனை தள்ளுபடி செய்ய முதல்வர் முயற்சிக்க வேண்டும்” என்று புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் நாஜிம் வலியுறுத்தினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் பேசியது: “புதுச்சேரிக்கு 2007-ல் தனிக்கணக்கு தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து 80 சதவீத நிதிக்கொடை வந்தது. அப்போது கடன் வாங்கும் அதிகாரம் கிடையாது. தனிக்கணக்கு தொடங்கிய பிறகு நமக்கு கடன் வாங்கும் அதிகாரம் கிடைத்தது.

அப்போதிலிருந்து பழைய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை பழைய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. தினமும் ரூ.1 கோடி வட்டி கட்டும் சூழல் இருந்தது. தற்போது கடன் குறைந்துள்ளது. இந்நிலையில், மாநில அந்தஸ்தை ஓரம் வைத்துவிட்டு, பழைய கடனை தள்ளுபடி செய்ய முதல்வர் முயற்சி எடுக்க வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி நிதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

ஹரியானாவில் கட்டிட விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற பிறத்த உத்தரவால், மாநிலத்தில் வர்த்தக உரிமம் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

பள்ளி கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது நீதிமன்ற உத்தரவை கூறி, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை நீக்குகின்றனர். அதே நேரத்தில் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக பேராசிரியர்களை நீக்கிவிட்டு, மீண்டும் ஒப்பந்த அப்படையில் பேராசிரியர்களை போடுகின்றனர். இது எந்த வகையில் நியாயம்?

எஸ்பி தலைமையில் குழு அமைத்து, கஞ்சாவை ஒழிக்க வேண்டும். காரைக்காலுக்கு தனியாக விளையாட்டு பள்ளி அமைத்து தர வேண்டும். ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் இருந்தவர்களை, நீதிமன்ற உத்தரவை கூறி நீக்கி விட்டனர். இதில் தவறு செய்த அதிகாரிக்கு எந்த தண்டனையும் கிடையாது.

ஆனால், பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தண்டனை கொடுப்பது தவறான நடவடிக்கையாகும். நீதிமன்றம் பரிசீலினை செய்யுமாறு கூறியும், பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவிலேயே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஒன்றுமே நடக்காதது புதுச்சேரியில் மட்டும்தான். ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு திட்டம் என்பது ஒரு தோல்வி அடைந்த திட்டம். இந்த திட்டத்துக்கான அட்டையை ஜிப்மரைத் தவிர எங்கு எடுத்து சென்றாலும் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையை ஒரே அமைச்சர், ஒரே ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கொடுத்தால் நல்ல காலம் பிறக்கும். 108 ஆம்புலன்ஸை தனியார்மயமாக்க வேண்டும். மீனவ சமுதாய மக்களை மீண்டும் எம்பிசி பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம்</p></div>
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in