

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவுற்றது. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜக 10, அதிமுக, லஜகவுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த முறையை விட அதிமுக மிக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
புதுச்சேரியில் கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதை போல் இம்முறையும் 16 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. அதேநேரத்தில் பாஜகவுக்கு கடந்த முறை 9 தொகுதிகளை விட கூடுதலாக ஒரு தொகுதி சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கியுள்ளனர். அதிமுகவுக்கு கடந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குகின்றனர். அதேபோல் புதிய கட்சியான லாட்டரி அதிபரின் லஜக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது.
இதுபற்றி என்டிஏ வட்டாரங்களில் விசாரித்தபோது, "கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை உறுதிப்படுத்திய சூழலில் முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் இம்முறை போட்டியிடுகிறது.
அதே நேரத்தில் மாஹே, ராஜ்பவன் தொகுதிகளை பாஜகவுக்கு விட்டு தந்துள்ளது. இதில் அமைச்சர் தொகுதியான ராஜ்பவனில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் போட்டியிடவுள்ளார்.
என்.ஆர்காங்கிரஸில் நடப்பு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு மீண்டும் தரப்போவதில்லை என முடிவு எடுத்து படிப்படியாக ஒப்புதலை ரங்கசாமி வழங்கி வருகிறார். அதேபோல் பாஜகவிலும் முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு இல்லை.
லஜக கட்சியான காமராஜர் நகரில் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸும், நெல்லித்தோப்பில் பாஜக அமைச்சர் ஜான்குமார் மனைவியும் போட்டியிடுவார்கள். இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றனர்.